திருவிழா பாகம் 1

 
திருவிழா என்றதும் ஏதோ சன் டிவியின் தெய்வ தரிசனம் கோவிலின் சிறப்புக்களைக் கூறப் போகிறேன் என்று நினைத்து நீங்கள் படிப்பதாக இருந்தால் இப்பொழுதே சொல்லி விடுகிறேன் தொடராதீர்கள் ஏனெனில் இது நீலகண்டன் ஊர் திருவிழாவிற்கு நாங்கள் சென்று வந்ததைப் பற்றிய ஒரு பதிவு நீலகண்டனும் திருநாவுக்கரசும் தங்கள் ஊரில் நடக்க இருக்கும் திருவிழாவிற்கு நாங்கள் வந்தே ஆக வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்காத குறையாக எங்களை அழைத்ததால் நான் ,முருகப்பன் மற்றும் உதயா மூவரும் போவது என்று முடிவானது. ஏதோ தோராயமாக அவன் ஊர் பெயரைச் சொல்லி பேரூந்தில் இருந்து இறங்கினோம், நீலகண்டனும் , திருநாவுக்கரசும் பேரூந்து நிறுத்ததிலிருந்து எங்களை வரவேற்று அழைத்துச் சென்றனர். நீலகண்டனின் வீடு சுற்றிலும் மரம் செடிகொடிகளுடன் கூடிய அழகான கிராமத்து வீடு பார்த்த உடனேயே மனத்தினுள் மகிழ்ச்சி பரவும், வீட்டினுள் நுழைந்த உடன் இண்டு இடுக்கு சந்து பொந்துகளிலிருந்தெல்லாம் யார்யாரோ வந்து வரவேற்றார்கள் ஒவ்வொருவரையும் பார்த்து சிரித்து தலையாடித் தலையாட்டி லேசாக கழுத்து வலிக்கக் கூட செய்தது முகத்திலும் நிரந்தரமாக புன்னகை உறைந்து போயிருந்தது.


                               அடுத்த அரைமணி நேரத்தில் நீலகண்டன் மாப்பிளைகளா சாப்பாடு ரெடி ஆய்டுச்சு வாங்க சாப்பிடலாம் என்று வீட்டின் நடு கூடத்திற்கு அழைத்து சென்றான் 

அங்கு பந்திப் பாய் விரித்து இலை போட்டிருந்தார்கள் சத்தியமாக அதற்கு முன் அவ்வளவு பெரிய இலையை நான் பார்த்ததே கிடையாது அந்த இலையைப் பார்த்ததுமே தலை லேசாக கிறுகிறுக்க ஆரம்பித்தது , நீலகண்டனிடம் டேய் ஒரு இலைல ஒருத்தர் தானடா சாப்பிடுவாங்க என்றேன் பாவமாக, என்ன நக்கலா பின்ன என்ன நாலு பேரா சாப்பிடுவாங்க என்று முறைத்தான். அவ்வளவு பெரிய இலையில் அமர்ந்து சாப்பிடும் அளவு எனக்கு மன திடம் இல்லாததால் டேய் நான் வீட்டிலேயே சாப்டுட்டு தான் டா வந்தேன் என்றேன் , அதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் இங்கெல்லாம் வந்தா சாப்டுட்டு தான் போக முடியும் இல்லன்னா அடி தான் விழும் அப்புறம் உன் இஷ்டம் என்றான். பக்கத்தில் நின்ற உதயாவும் ,முருகப்பனும் இந்த சந்தர்ப்பத்திற்காக நீண்ட நாள் காத்திருந்ததைப் போல் முகம் முழுக்க சிரிப்புடன் இலையில் ஏற்கனவே அமர்ந்திருந்தார்கள் , என்னை நீலனும் ,திருநாவுக்கரசும் சேர்ந்து கிட்டத்தட்ட கத்தி முனையில் இலையை நோக்கி செலுத்த வேறு வழி இல்லாமல் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டே இலையின் முன்னே அமர்ந்தேன் , நீலனின் அம்மா ஒரு பெரிய பாத்திரத்தை அலட்சியமாக ஒரு கையில் தூக்கி வந்து எனது இலையில் கிட்டதட்ட நான் மூன்று வேலைக்கும் சேர்த்து சாப்பிடும் அளவு சாதத்தை சரித்துக் கொண்டிருந்தார்கள் , ஐய்யோ போதும்மா போதும்மா இவ்வளவு சாப்பிட மாட்டேன் மா என்று கதறக்கதற அதைக் கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல் வளர்ர புள்ள நல்லா சாப்பிடுய்யா என்றார்கள். மனிதர்கள் இருபது வயதிற்கு மேல் வளருவதில்லை என்ற விஞ்ஞான உண்மையைக் கூறினால் கண்டிப்பாக அடி விழும் என்பதால் பேசாமல் சாப்பிட துவங்கினேன், இருந்தார்ப் போலிருந்த நீலகண்டன் தீடீரென மாப்புள சாப்பிட்டு முடிஞ்சதும் இலையை உள்ள மூடுடா தப்பித்தவறி வெளில மூடினா கொண்டே போடுவாய்ங்க என்றான் , எது உள்ள மூடுறதா இந்த இலை எங்க ஆரம்பிச்சு எங்க முடியுதுன்னே தெரியல இதுல எது உள்ள எது வெளில என்றேன் , இது கூட தெரியாதா காய்கறி வைச்சுருக்கற பக்கத்த கீழ கொண்டு வந்து மூடு அது தான் உள்ள மூடுறது என்று விளக்கினான் அது வரை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமே டைனிங் எடீகட் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு நமது கிராமப்புறங்களில் அதையும் தாண்டி டைனிங் எடீகட் கடைப்பிடிக்கப் படுவது தெரிந்தது. எல்லாரும் அசந்த நேரமாக பார்த்து சாப்பிட முடியாத மிச்ச சாதத்தை உள்ளே வைத்து மூடிவிட்டு எழுந்தேன். அடுத்து என்ன செய்வானுகளோ என்று மனம் கிடந்து அடித்துக் கொள்ள நேரம் காலம் தெரியாமல் சாப்பாடு ரொம்ப நல்லா இருந்ததுடா என்று கூறி வெறுப்பேற்றினான். சரி திருவிழாவுக்கு எப்ப போறது என்று கேட்டதும் ஏன் பறக்குற அதுக்கு இங்கிருந்து கொஞ்ச தூரம் போகனும் வண்டி கொண்டு வர சொல்லிருக்கேன் இப்ப வந்துடும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஜல் ஜல் என்ற சத்தத்துடன் ஒரு அழகான மாட்டு வண்டி வந்து நின்றது , எனக்கு சிறு வயதில் இருந்தே மாட்டு வண்டியில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆவலாகையால் வண்டி நின்றவுடன் முதல் ஆளாக அதில் ஏறினேன் , மொத்த திருவிழா நிகழ்ச்சியையும் இந்த ஒரு பதிவில் கூறினால் அது மிகவும் பெரிதாக தெரியும் என்பதால் அதை இரண்டு பாகமாக பிரித்து அடுத்ததில் மிச்சத்தை கூறி இருக்கிறேன் ............

1 comment:

  1. Thiruvizha Part-2 when?????????????????????????????????????

    ReplyDelete