திருவிழா பாகம் 2

திருவிழாவிற்கு எங்களை அழைத்துப் போக வந்திருந்த மாட்டு வண்டியில் நான்  நீலகண்டன் , திருநாவுக்கரசு, முருகப்பன், உதயா மற்றும் நீலனின் நண்பர்கள் அனைவரும் ஏறியதும் வண்டி புறப்பட்டது, நீலனின் நண்பர்களுடனான அறிமுகம் முடிந்ததும் மெதுவாக ஒருவன் ஏண்டா பங்காளி நம்ம பிரபு பய கொஞ்ச நாளா மந்திரிச்சு உட்ட மாதிரியே திரியரானே கொஞ்சம் பார்த்து எதாவது செய்ய கூடாதா என்று பக்கத்திலிருந்தவனை நக்கலாக பார்த்துக்கொண்டே வம்பை ஆரம்பித்து வைத்தான். உடனே நீலகண்டன் வேண்டாம்டா சாமி ஒரு தடவ நான் பட்டதே காலத்துக்கும் போதும் என்றவுடன் எல்லாரும் ஏக காலத்தில் சத்தமாக சிரித்தனர் , நான் நீலகண்டனிடம் என்னடா மாப்புள ஆச்சு என்று கேட்க அவன் சொல்ல மாட்டான் பாஸ் நாங்க சொல்றோம் அந்த கதையை என்று நீலனின் நண்பனான பரமானந்தம் கூற தொடங்கினான் அந்த கதை சுருக்கம் இது தான் ,தஞ்சையில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை பிரபு தான் காதலிப்பதாக நீலனிடம் கூறி அந்த பெண்ணும் தன்னை காதலிக்கிறதா என்று தெரியவில்லை என்று புலம்பியிருக்கிறான் உடனே உனக்காக நான் அந்த பெண்ணிடம் பேசுகிறேன் என்று நீலகண்டன் உணர்ச்சி வேகத்தில் உறுதி கூறியிருக்கிறான், மறுநாளே பிரபு தன்னை அந்த பெண் வரும் வழியில் கொண்டு போய் நிறுத்துவான் என்று நீலகண்டனே எதிர்பார்த்திருக்கவில்லை. வேறு வழி இல்லாமல் அந்த பெண்ணிடம் சென்று இங்க பாருங்க என் ஃப்ரெண்ட் பிரபு உங்கள ரொம்ப சின்சியரா லவ் பண்றான் நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க என்று கேட்டு வைக்க அந்த பெண்ணோ சற்றும் யோசிக்காமல் தன் கையில் வைத்து குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாக்கெட்டை நீலனின் முகத்தில் வீசி அடித்ததோடு மட்டும் நில்லாமல் இரு எங்க அண்ணன் கிட்டயே சொல்றேன் என்று மிரட்டி விட்டு வேறு சென்றிருக்கிறது முகத்தில் இருந்த தண்ணீரை துடைத்துக் கொண்டே என்னடா பங்காளி அவங்க அண்ணன் கிட்ட சொல்றேன்னு போவுது என்று சிரித்தபடியே கூறியிருக்கிறான்.
இதைக் கேட்டு அரண்டு போன பிரபு என்ன பங்காளி சொல்ற நெஜமாவே அவங்க அண்ணன் கிட்ட சொல்லிடுமாடா என்று கேட்க ஏண்டா அவங்க அண்ணன் கிட்ட சொன்னா நமக்கு என்ன சொன்னா சொல்லிட்டு போவுது என்று நீலகண்டன் அலட்டலாக கூற பங்காளி அவ அண்ணன் சப் இன்ஸ்பெக்டரா இருக்காரு டா என்று பிரபு சொல்ல அப்பொழுது தான் நீலகண்டனுக்கு நிலைமையின் தீவிரம் புரிந்திருக்கிறது உடனே இருவரும் வாழ்க்கையில் முதல் முறையாக தனியார் பேருந்தை பிடித்து
( பஸ் பாஸ் வைத்திருப்பதால் உயிரே போனாலும் தனியார் பேருந்தில் ஏற மாட்டார்கள் ) ஊருக்கு கம்பி நீட்டியிருக்கிறார்கள் அதன் பின்னர் நீலகண்டன் கல்லூரிக்கு ஒரு வாரம் வரை விடுப்பு எடுத்துக்கொண்டு ஊரிலேயே இருந்திருக்கிறான் ( நாங்கள் கேட்டதற்கு வைரல் ஃபீவர் என்றான்) இதை சொல்லிவிட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள் , உனக்கு ஏண்டா இந்த வேலை என்று நான் கேட்க மாப்புள லவ் பண்றேன் லவ் பண்றேன்னு சொன்னானே ஒழிய அது சப் இன்ஸ்பெக்டரோட தங்கச்சினு இந்த நாய் சொல்லவே இல்லடா என்றான் பாவமாக . ஒரு வழியாக இந்த கதை முடிவதற்கும் திருவிழா நடைபெறும் இடத்திற்கு நாங்கள் சென்றடையவும் சரியாக இருந்தது.
 வண்டியை விட்டு இறங்கியதும் திருநாவுக்கரசு என்னிடம் வந்து உங்க கிட்ட யாரும் வந்து எந்த ஊர்லேர்ந்து வரீங்கன்னு கேட்டா நம்ம ஊரு பேர மட்டும் சொல்லிடாதீங்க தஞ்சாவூர்லேர்ந்து வரேன்னு மட்டும் சொல்லுங்க என்றான் ஏண்டா என்றதும் அது ஒன்னும் இல்லடா போன வருஷம் திருவிழாவுல நம்ம ஊரு பசங்க போதையில இந்த ஊருல ஒரு வைக்கோல் போருக்கு நெருப்பு வைச்சுட்டு போயிட்டானுங்க அதான் நம்ம ஊருன்னு சொன்னீங்கன்னா எதாவது பிரச்சினை ஆனாலும் ஆகும் என்று அலட்சியமாக கூறிவிட்டு அங்க பாரு கரகாட்டம் , மயிலாட்டம் எல்லாம் நடக்குது பாரு என்று என்னை இழுத்து சென்றான் , இதற்கிடையில் உதயாவும் , முருகப்பனும் கண்ணில் கண்ட திண்பண்டங்களையெல்லாம் வாங்கி தின்று தீர்த்துக்கொண்டிருந்தார்கள் , வழக்கம் போல நான் மட்டும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றேன். ஒரு வழியாக திருவிழா முடிந்து எல்லாரும் விடியற்காலையில் நீலகண்டன் ஊருக்கு திரும்பினோம் மறு நாள் காலை உள்ளூர் கோவிலில் எதோ சிறப்பு பூஜை என்று மறுநாளும் அங்கேயே தங்கினோம் நாள் முழுவதும் கோவிலில் சென்றது இரவானதும் நீலகண்டன் தான் வருவதற்கு நேரமாகும் என்பதால் எங்களை திருநாவுக்கரசுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தான் , வீட்டில் இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்க சென்றபொழுது பிரபு அவசரமாக திருநாவுக்கரசுவிடம் ஓடி வந்து பங்காளி நீலகண்டன் மாமாவுக்கும் அவன் பங்காளிக்கும் ஏதோ தகறாராயிடுச்சுடா மாமாவோட கண்ணுல கம்பியால குத்திட்டாங்கே நீலகண்டன டியூஷன் செண்டர்ல பிடிச்சு வச்சுருக்கோம் சீக்கிரம் வாடா என்று கத்த எல்லாரும் பதறியடித்து ஓடினோம்.
அங்கு சென்று பார்த்தால் நீலகண்டன் கையில் ஒரு முரட்டு அரிவாளோடு விடுங்கடா இன்னிக்கு அவனை வெட்டாம விட மாட்டேன் என்று திமிறிக்கொண்டு நிற்க அவனைச் சுற்றி ஆறு பேர் அவனை இறுக்கிப் பிடித்தபடி ( அவன் உடம்புக்கு ஆறு பேர் கொஞ்சம் அல்ல ரொம்பவே அதிகம்) சமாதனபடுத்திக்கொண்டிருந்தார்கள் போதாக்குறைக்கு நீலகண்டன் போதையில் வேறு இருந்ததால் வேறு வழியில்லாமல் நானும் சேர்ந்து அவனைச் சமாதனபடுத்தும்படி ஆனது ஆனால் நீலகண்டன் அதற்கெல்லாம் மசிவதாக தெரியவில்லை , அரசுவிடம் இப்ப என்னடா செய்யறது என்று கேட்க அவனை தெளியவைச்சா தான் மாப்புள சரிப்படுவான் அதுக்கு ஒரே வழிதான் இருக்கு என்று கூறிவிட்டு டேய் அவன தூக்குங்கடா என்று கட்டளையிட்டான் உடனே ஆறு பேரும் நீலகண்டனை அலேக்காக தூக்கிக்கொண்டு விடுவிடுவென நடந்தார்கள் , டேய் எங்கடா கொண்டு போறீங்க சொல்லிட்டு போங்கடா என்று கத்தினேன் குளத்துக்கு என்று தூரத்தில் இருந்து பதில் வந்தது, அடுத்து என்ன நடக்க போகிறதோ என்று ஆர்வம் உந்தித்தள்ள அவர்கள் பின்னால் குளத்துக்கு நான் , உதயா முருகப்பன் மூவரும் ஒடினோம் , அங்கு சென்று பார்த்தால் மொத்த பேரும் சேர்ந்து நீலகண்டனை குளத்து நீரில் போட்டு கதறக்கதற முக்கி எடுத்தார்கள் , இப்படி ஒரு அரைமணி முக்கி எடுத்ததும் டேய் குளிருதுடா விடுங்கடா என்று நீலன் கத்த அப்பாடி தெளிஞ்சுடுச்சுடா அதான் குளிருதுன்னு சொல்றான் அவன டியூஷன் செண்டருக்கு இழுத்துட்டு வாங்க என்று அரசு கூறியதும் நீலனைக் கைப்பிடியாய் பிடித்து இழுத்து வந்தார்கள் வரும் போது ஆக்ரோஷமாக வந்தவன் போகும் போது குளிரில் நடுங்கிக்கொண்டு பலியாடு போல் பாவமாக சென்றான். ரூமுக்கு வந்ததும் அவனுக்கு தலை துவட்டி விடுவதும் , தைலம் தேய்த்து விடுவதுமாக அதிகாலை மூன்று மணி வரை ஒரே அமர்க்களமாக இருந்தது அதன் பின்னர் தான் எல்லாரும் தூங்கினோம்.
மறுநாள் காலை நீலனிடம் என்னடா ராத்திரி அப்படி பயமுறுத்திட்ட என்றேன் அதெல்லாம் ஒன்னும் இல்லடா என்று சிரித்தான் , சரி சரி நாங்க ஊருக்கு கிளம்பறோம் என்றேன் உடனே அதெல்லாம் சாப்பிட்டு போகலாம் என்றான் , சாப்பாடு என்றதும் அந்த வாழை இலை நினைவுக்கு வர மிரண்டு போய் இல்லடா நான் ஊருலயே பார்த்துக்கிறேன் என்று கூறி விட்டு நீலனின் வீட்டில் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு பேரூந்து நிறுத்தத்திற்கு சென்றோம் எங்களுடன் நீலகண்டன் , திருநாவுக்கரசு மற்றும் எல்லா நண்பர்களும் எங்களை வழி அனுப்ப நின்று கொண்டிருந்தார்கள் அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் நீலனைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தி டேய் பங்காளி என்னடா இங்க என்றான் ஒன்னும் இல்லடா திருவிழாவுக்கு ஊர்லேர்ந்து பசங்க வந்திருந்தாங்க அவிங்கள பஸ் ஏத்திவிட வந்தேன் அதான் என்றான் அதற்குள் அவன் நானும் உன் வீட்டுக்கு தான் டா போயிட்டிருக்கேன் என்று கூற அப்படியா சரி இரு நானும் வரேன் என்று கூறிவிட்டு சரிடா அப்ப நாளைக்கு காலேஜ்ல பார்ப்போம் என்று விடைபெற்று வந்தவனுடன் பைக்கில் ஏறி சென்றான். பார்த்துகொண்டிருந்த அரசுவும் மற்ற நண்பர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து விட்டு பார்த்தியா கடைசியா நம்மல கேனப்பயலாக்கிட்டான் என்றனர் , எனக்கு காரணம் விளங்காததால் ஏண்டா அப்படி சொல்ற என்று கேட்டதும் இப்ப பைக்கில ஒருத்தனோட போறானே அவன் யாரு தெரியும்ல நேத்து ராத்திரி பூரா நம்மல தூங்க விடாம ஒருத்தன வெட்ட போறேன்னு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டிருந்தானே அது இவனத்தான் , போதை தெளிஞ்சதும் எப்படி ஒன்னு கூடிட்டாங்கே பார்த்தியா என்று கூறி சிரித்தான் .... அடங்க் கொக்கமக்கா!!!!!!!!!!!!!!!!!!!

1 comment:

  1. நினைவுகள் நன்று... நினைவுகளை நினைப்பது நிறுத்திவிட்டால் உறவுகள் உயிர் அற்றுப் போய்விடும். பாராட்டுகள்!

    குறிப்பு: சின்ன திருத்தம் “செண்டர்” அல்ல “சென்டர்”

    நான் படித்த கவிதை ஒன்று:
    என் இதயம்
    என்னிடம் தான் இருக்கிறது
    என்றாலும் - அதை
    சாவியின்றி திறக்கும் சக்தி
    உன் நினைவுகளுக்கு இருக்கிறது

    -ஜாவிட் ரயிஸ்

    ReplyDelete