மற்ற மூவர்

இந்த பதிவில் நீலகண்டன் , திருநாவுக்கரசு மற்றும் முருகப்பன் இவர்களைப்பற்றிக் கூறிவிடுகிறேன் அப்பொழுதுதான் பின் வரும் பதிவுகளை உங்களால் ரசிக்க முடியும். நீலகண்டனை கற்பனை செய்ய நீங்கள் பெரிதாக ஒன்றும் சிரமப்பட வேண்டியதில்லை உங்கள் வீட்டில் முனை சீவப்படாத பென்சில் இருந்தால் அதைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள் இப்பொழுது அதற்கு கை,கால் எல்லாம் கற்பனை செய்துகொள்ளுங்கள் அது தான் நீலகண்டன், அவ்வளவு ஒல்லியாக இருப்பான் (அவ்வளவும் வினை) , கிராமத்து மனிதர்களுக்கே உரிய பாசமும் இவனிடத்தில் ஏராளமாக இருக்கும் , நட்புக்காக எந்த உதவியும் செய்யத்தயங்கியதில்லை (இது வரை நண்பர்களுக்காக தான் அணிந்திருக்கும் தங்க சங்கிலியை குறைந்தது பத்து முறையாவது அடமானம் வைத்திருப்பான்). இவனுடைய குடும்பம் ஒரு விவசாய குடும்பம் ஆனால் இவன் செய்யும் அதிகபட்ச விவசாய வேலை தன் தந்தைக்கு வயலுக்கு சாப்பாடு கொண்டுபோய் கொடுப்பது தான்.எங்கள் கல்லூரி வாழ்க்கையை சுவாரசியமாக்கியதில் இவனுடைய பங்கு கணிசமானது காரணம் எங்கள் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணையே காதலித்தான் (தற்பொழுது திருமணமும் செய்து கொண்டான்). அடுத்து திருநாவுக்கரசு எங்கள் மொத்த கூட்டத்தில் இவன் ஒருவன் தான் கொஞ்சம் அதிரடியான ஆசாமி . நல்ல உயரம் நன்கு உரமேரிய கிராமத்து உடல் , எவரையும் சட்டென்று எதிர்த்து விடுமளவுக்கு அசாத்திய துணிச்சல் ஆனால் எண்ணம் செயல் எதிலும் துளி கூட சூது வாதே கிடையாது. சுருக்கமாக கூறினால் இவன் ஒரு முரட்டுக் குழந்தை , கூடவே நீலகண்டன் மட்டும் இல்லாமல் போய்விட்டிருந்தால் இவனைப் பலரும் தனது சொந்த நலன்களுக்கு உபயோகப்படுத்திக் கொண்டிருப்பார்கள். அடுத்து முருகப்பன் இவனுக்கு மொத்தம் மூன்று தமக்கைகள் நாலவதாக பிறந்தவன் தான் இவன் அதனால் தானோ என்னவோ சதாசர்வ காலமும் பணத்தை எப்படி சேமிப்பது என்ற சிந்தனையிலேயே காலத்தைக் கழிப்பான். அவன் வீட்டிலும் ஒற்றை ஆண் பிள்ளையாக பிறந்ததால் ஒன்றும் பெரிய செல்லமெல்லாம் கிடையாது சற்று கட்டுப்பாடாகவே வளர்த்து வந்தார்கள். இவனும் உதயாவும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தால் போதும் இடையில் சுனாமியே வந்தாலும் எழுந்திருக்க மாட்டார்கள் உணவின் மேல் அப்படி ஒரு மோகம் இருவருக்கும் , அதிலும் முருகப்பனுக்கு நீங்கள் ஒரு உருளைக்கிழங்கு போண்டா வாங்கி தந்து விட்டால் போதும் அப்படியே உங்களை சரணடைந்து விடுவான் நீங்கள் என்ன சொன்னாலும் செய்துவிடுவான் , இதை சரியாக உபயோகப்படுத்திக்கொள்வது நீலகண்டனாக மட்டுமே இருக்கும் , தான் காதலிக்கும் பெண் வரும் வரையில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பது அவனது வழக்கம் அதற்கு எப்பொழுதுமே துணைக்கு நிற்பது முருகப்பனாகத்தான் இருக்கும் இதற்கு நீலகண்டனுக்கு ஆகும் செலவு வெறும் மூன்று ரூபாய் தான் ( அப்போதைய உருளைக்கிழங்கு போண்டாவின் விலை) , முருகப்பனுக்கு ஒரு போண்டா வாங்கி தந்து விட்டால் கால் கடுக்க பல மணி நேரம் துணைக்கு நிற்பான்.

                           நீலகண்டன் கல்லூரியில் படித்த காலத்திலேயே தன் ஊரில் உள்ள +2 மாணவர்களுக்கு டியுஷன் எடுத்து அதில் வரும் வருமானத்தில் கல்லூரிக்கு பீஸ் கட்டினான் ,முருகப்பனோ தனது ஊரில் உள்ள கடைகளுக்கு எல்லாம் ரஸ்னா பாக்கெட் போட்டு அதில் வந்த வருமானத்தில் கல்லூரிக்கு பணம் கட்டினான் , உதயாவோ தனது தந்தையின் கடையிலேயே வேலை செய்து தனக்குத் தேவையான தொகையை சம்பாதித்துக் கொண்டான் இவர்களில் யாரும் கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது நோகாமல் தங்களுக்கு தேவையான பணத்தை தங்களது பெற்றோர்களிடமிருந்து பெற்றிருக்க முடியும் ஆனால் அவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே முயன்று பெறுவதில் ஆர்வம் காட்டினார்கள், இவர்களில் கடைசி வரை பெற்றோரின் தயவை எதிர்பார்த்திருந்தவன் நான் ஒருவன் மட்டுமே. இப்பொழுதும் இவர்களைப்பற்றி நினைக்கையில் சற்று பெருமையாகவே உணர்கிறேன். இவர்களைப் பற்றின முன்னுரை போதுமென்று தோன்றுவதால் இதை இத்துடன் முடித்துக்கொள்கிறேன் , இனி எங்கள் கல்லூரி நாட்கள் கலை கட்டும் ............

No comments:

Post a Comment