உதயா

நாட்டுக்கோட்டை நகரத்தாரின் பெயரைக் காப்பாற்றவே அவதாரம் எடுத்தாற்போல அப்படி ஒரு செழிப்பான சரீரம் அதோடு கூட லிட்டர் லிட்டராக பால் வடியும் முகம் இரண்டும் சேர்ந்தால் அது தான் உதயா, அந்த பெரிய சரீரத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாத சுறுசுறுப்பும் இவனது சிறப்பம்சம் , தந்தைக்கு மலிகைக் கடை வியாபாரம் என்பதால் கல்லூரியில் கழித்த நேரம் தவிர மற்ற நேரங்களில் கடையில் அவருக்கு உதவியாக இருப்பான் (சரியாக சொல்வதென்றால் கடையில் கழித்த நேரம் போக மீதி நேரமிருந்தால் கல்லூரிக்கு வருவான்) , போற்றுவார் போற்றுவதும் தூற்றுவார் தூற்றுவதும் போகட்டும் கண்ணனுக்கே என்பது போல் எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு ஜென்மம் ( டேய் அசைன்மெண்ட் சப்மிட் பண்றதுக்கு இன்னைக்கு தான் டா கடைசி நாள் என்று பதறினால் கொடுப்போம் கொடுப்போம் இப்ப என்ன அவசரம் என்று தான் பதில் வரும்). அமர்ந்திருக்கும் இடத்தில் இடியே விழுந்தாலும் தள்ளி அமர்ந்து கொண்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பான் ( அப்பா அவ்வளவு மன உறுதியா என்று வியக்காதீர்கள் அவ்வளவும் கொழுப்பு). கல்லூரி நேரம் முடிந்த பிறகு இவனை பத்து நிமிடங்கள் கூட நிறுத்தி வைக்க முடியாது என்னவோ தன் கையெழுத்திற்காக ஆயிரம் பேர் காத்திருப்பதைப் போல அவசர அவசரமாக வீட்டை நோக்கி ஓடுவான், உடையிலாகட்டும் , நடவடிக்கைகளிலாகட்டும் மற்றவரைக் கவர்வதற்காக எதையுமே செய்ய மாட்டான் , தனது ஓட்டை சைக்கிளை பூலோகத்திலேயே இதை விட சிறப்பான வாகனம் எதுவும் கிடையாது என்ற திருப்தியுடன் ஓட்டிச் செல்பவன், அவனது மன உறுதியைக் குலைக்கச் செய்யும் ஒரே விஷயம் ஆங்கிலம் தான் (நான் இதற்குள் ஆங்கிலத்தின் மீது ஒரளவு நட்பு பாராட்ட ஆரம்பித்துவிட்டேன் ). ஆங்கிலத்தின் மீது அவனுக்கு இருந்த வெறுப்பை என்னால் வார்த்தைகளில் விளக்க முடியவில்லை , நாங்கள் படித்து முடிக்கும் வரை இவனுக்கும் ஆங்கில விரிவுரையாளருக்கும் ஒரு துவந்த யுத்தம் நடந்துகொண்டே இருந்தது இருவரும் அக்னி நட்சத்திரம் கார்த்திக் பிரபு போல் எப்பொழுது நேருக்குநேர் சந்தித்துக் கொண்டாலும் முறைத்துக் கொள்வார்கள் , நல்ல காலம் இருவரும் அவர்களைப் போல இடித்துக் கொள்ளமாட்டார்கள் அப்படி எதுவும் நடந்திருந்தால் உதயாவின் உடல்வாகுக்கு இந்நேரம் விரிவுரையாளரின் உருவப்படத்திற்கு மாலையிட வேண்டியிருந்திருக்கும் ( உதயாவின் உடல்வாகைப்பற்றி ஏற்கனவே தெளிவாக விளக்கியிருக்கிறேன்) , அதனால் தானோ என்னவோ அவரும் கடைசி வரை அவனை முறைப்பதோடு நிறுத்திக்கொண்டார். வகுப்பில் எப்பொழுதேனும் ஆங்கில தேர்வு நடந்தால் அனைவருக்கும் விடைத்தாள்களை வழங்கிய பின்னர் நேராக உதயாவிடம் சென்று எப்படியும் நீ ஒன்னும் எழுதப் போறதில்ல அப்புறம் ஏன் ஒரு பேப்பர வேஸ்ட் பண்ற தயவு செஞ்சு திருப்பிக் கொடுத்துடு என்பார் , நான் எவ்வளவு நேரம் சார் சும்மாவே உட்கார்ந்திருக்கிறது என்று எதிர் கேள்வி கேட்பான் அதற்கு அவர் உன்ன யாருப்பா உட்கார சொன்னா பேப்பர கொடுத்துட்டு போ என்பார் உடனே மறுவார்த்தை பேசாமல் அவரிடம் விடைத்தாளைக் கொடுத்துவிட்டு குடியரசு தினத்தன்று பரம் வீர் சக்ரா விருது வாங்கிய ராணுவ வீரன் போல் கம்பீரமாக சென்று விடுவான் நாங்கள் எல்லாம் ஏக்கமாக அவனையே பார்த்துக் கொண்டிருப்போம். எனது கல்லூரி நாட்களை நான் பெருமளவு செலவு செய்தது இவனுடனாகத்தான் இருக்கும் , சிவாலயங்கள் , கலை நிகழ்ச்சிகள் , தியாகராஜர் ஆராதனை என்று எங்கு எது நடந்தாலும் நாங்கள் போகத் தவறியதே இல்லை. சுருக்கமாக கூறவேண்டுமென்றால் இன்று வரை எனது எல்லா தருணங்களிலும் உடனிருப்பவன் இவன். அடுத்து வரும் பதிவுகளில் நீங்கள் இவனைப் பற்றி மேலும் அறிந்து கொள்வீர்கள் என்பதால் இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன்.


2 comments:

  1. என் கவிதைக்குள்
    வர மறுக்கின்றன
    உன் மௌனத்தோடு
    வைத்திழந்த
    என் வார்த்தைகள்
    ஒரு தோல்வியின் தாளாமையோடு

    - ரா.உதயகுமார்

    ReplyDelete