கல்லூரி நாட்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் தனது கல்லூரி நாட்கள் தான் தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட நாட்களாக இருக்கும் எனக்கும் அப்படித்தான் , கல்லூரி நாட்களும் அது அமைத்து தந்த நட்பு வட்டமும் தான் இன்று வரை எனது வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொண்டிருக்கின்றன. நான் இளங்கலை படித்த கல்லூரி அவ்வளவு ஒன்றும் பிரபலமானது கிடையாது எனினும் பனிரெண்டாம் வகுப்பில் நான் எடுத்த கேவலமான மதிப்பெண்களையும் பொருட்படுத்தாமல் எனக்கு உடனே இடம் தந்ததால் அங்கு சேர வேண்டியதாகிவிட்டது. கல்லூரி ஆரம்பித்த முதல் சில நாட்கள் ராகிங் பயத்துடனேயே கழிந்தது. முதல் நாளே ராகிங்கில் மாட்டிக்கொண்டேன் , எடுத்த எடுப்பில் சிம்ரன் வாய்ப்பாடு சொல்ல சொன்னார்கள் ,அப்படி என்றால் என்ன என்று கேட்டதற்கு பொது அறிவு இவ்வளவு கம்மியாக இருந்தால் நீ எப்படி பட்டபடிப்பை முடிப்பாய் என்று திட்டு விழுந்தது, அதன்பின்னர் வாய்ப்பாடு கூறும் முறை எனக்கு விளக்கப்பட்டது ஒரு சிம்ரன் சிம்ரன் இரண்டு சிம்ரன் சிம்ரன் சிம்ரன் மூணு சிம்ரன் சிம்ரன் சிம்ரன் சிம்ரன் என்று பனிரெண்டு வரை சொல்லச் சொன்னார்கள் , வேண்டாம் சார் (சார்னு கூப்பிடலன்னா அதுக்கு தனியா திட்டுவானுங்க) எனக்கு அதெல்லாம் வராது சார் என்றேன் பாவமாக , சரி அப்படின்னா ஒன்னு செய் நம்ம காலேஜ் பேர சரியா சொல்லிடு உன்ன விட்டுர்றோம் என்றான் ஒருவன் உடனே நானும் நம்பி தமிழவேழ் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரி என்றேன் , பார்த்தியா தப்பா சொல்றியே போ போய் போர்ட பார்த்துட்டு வந்து சரியா சொல்லு பார்ப்போம் என்றான் , வாசல்வரை சென்று கல்லூரி பெயர் பலகையை பார்த்தால் அதைத்தான் போட்டிருந்தார்கள் , திரும்ப அவர்களிடம் சென்று அப்படி தாங்க போட்டிருக்கு என்றேன் அப்படியா எங்க திரும்ப சொல்லு பார்ப்போம் என்றான் மறுபடியும் தமிழவேழ் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரி என்றேன் அங்க தான் தப்பு பண்ற "கரந்தைக்" கலைக்கல்லூரின்னு சொல்லனும் க் க விட்டுட்ட என்றான் போடாங்க என்று மனதில் கருவிக்கொண்டு சாரி சார் என்றேன் , சரி போ என்றதும் விட்டால் போதும் என்று ஒடினேன். ஒரு வாரம் இப்படியே போனது தெனாலி கமல்ஹாசனைப் போல் யாரைக்கண்டாலும் பயமாக இருந்தது, அதன் பின்னர் தான் கொஞ்சம் கொஞ்சமாக நட்பு வட்டம் சேர ஆரம்பித்தது, கல்லூரியில் என்னை முதலில் கவர்ந்தது உதய குமார் தான் , காரணம் முதல் நாள் வகுப்பில் விரிவுரையாளர் நீங்கள் அனைவரும் படித்து முடித்த பின் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார் எல்லாரும் வாய்க்கு வந்தபடி எதோ ஒன்றை கூறினோம் ஆனால் உதயா மட்டும் சட்டென்று எழுந்து அரிசி கடை வைக்கப்போறேன் சார் என்றான் , திகைத்துப் போன விரிவுரையாளர் ஒருவேளை கிண்டலுக்கு சொல்கிறானோ என்று சந்தேகமாக அவனையே கூர்ந்து பார்க்க அவனோ நான் இதற்கு முன் வாழ்க்கையில் இவ்வளவு சீரியசாக இருந்ததே இல்லை என்பது போல் முகத்தை வைத்திருந்தான் அந்த நொடியே அவனை எனக்குப் பிடித்துப் போனது. நான் வீட்டில் இருந்து கல்லூரிக்குச் செல்வதற்கு வீட்டிலிருந்து பழைய பேரூந்து நிலையத்திற்க்கும் அங்கிருந்து கல்லூரிக்குமாக இரண்டு பேரூந்துகள் மாறவேண்டும். பழைய பேரூந்து நிலையத்தில் காத்திருக்கையில் என்னுடன் முருகப்பன்,நீலகண்டன் மற்றும் திருநாவுக்கரசு மூவரும் காத்திருப்பார்கள் எனவே நாங்கள் நால்வரும் நெருங்கிய நண்பர்களானோம். இவர்கள் எல்லாரைப்பற்றியும் முதலில் சுருக்கமாக கூறிவிடுகிறேன் அப்பொழுது தான் உங்களால் பின்னால் வரும் பதிவுகளை ரசிக்க முடியும். அடுத்த பதிவில் உதயாவிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

No comments:

Post a Comment