சோமுவும் குருவியும்
அந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் முழுதாக இரண்டு வருடங்களை ஓட்டுவதற்குள் எனக்கு தாவு தீர்ந்து போனது. இரண்டாம் வருட முடிவில் இனி நான் பள்ளிக்கு செல்லப்போவதில்லை என்று போர்க்கொடி உயர்த்த ,வெறுத்துப்போன என் தந்தை வேறு வழி தெரியாததால் என்னை பக்கத்து ஊரில் உள்ள ஒரு ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார். எனது போதிமரம் அந்த ஒரு வருட ஹாஸ்டல் வாழ்க்கை தான் , ஒரு வருடம் அந்த ஹாஸ்டலில் முடிந்ததும் என் பிரிவைத் தாங்க முடியாத என் பெற்றோர்கள் (அதாவது ஹாஸ்டலில் இருந்து அழைத்து வராவிட்டால் ஊரைவிட்டு ஓடி விடுவேன் என்ற என் மிரட்டலுக்கு பணிந்து) என்னை மீண்டும் தஞ்சையில் ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டனர், இங்கு எனக்கு அறிமுகமானவன் தான் சோமு ( அப்படி ஓன்றும் எங்கள் சந்திப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை தான்) , இன்று வரை இந்த நட்பு தொய்வில்லாமல் இருக்கிறது. புது பள்ளியில் நாங்கள் இருவரும் ஒரே பெஞ்சில் அமர்ந்திருந்தோம் , முதல் நாள் என்னிடம் திரும்பியவன் ஆமா இன்னிக்கு விஜய் டிவி பிரைம் டைம் மூவிஸ்ல என்ன படம் என்றான், உடனே சொல்லிவிட்டு காலையிலே பேப்பர்ல பார்த்துட்டேன் என்றேன் பெருமையாக(என் பொது அறிவைக் கண்டு வியந்தவனாக என்னைப் பார்த்து சிரித்தான்) இப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பமானது ( பெரிய கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு என்று நீங்கள் முனகும் சத்தம் எனக்கு இங்கு கேட்கிறது). அவன் ஆறாவது வகுப்பில் இருந்து அதே பள்ளியில் படித்ததால் அவனுக்கு அந்த பள்ளியில் உள்ள எல்லா ஆசிரியர்களையும் நன்றாக தெரிந்தது, அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள் எல்லாம் கிட்டதட்ட இரண்டு தலைமுறையாக அங்கிருப்பவர்கள் , அவர்களுக்கு ஏற்பட்ட செல்லப் பெயர்களும் அப்படித்தான் இப்பொழுது அவர்களுக்கு இருக்கும் செல்லப்பெயர்கள் என் தந்தை காலத்தில் ஏற்பட்டதாக இருக்கும். அன்று முதல் வகுப்பில் சோடாபுட்டி போட்டுக்கொண்டு ஒரு ஆசிரியர் உள்ளே நுழைந்தார் , சோமு உடனே இவர் தான் குருவி நமக்கு கிளாஸ் டீச்சர், சயின்ஸ் எடுப்பாரு என்றான். குருவியா என்றேன் சந்தேகமாக ஆமா அது அவரோட பட்டப்பெயர் என்றான். அனைவரும் எழுந்து நின்றவுடன் எங்களை ஒரு பார்வை பார்த்தவர் கைகள் இரண்டையும் உடம்புடன் ஒட்டி வைத்துக்கொண்டு சிட்டெளன் சிட்டெளன் என்றார் அசப்பில் பார்த்தால் ஒரு குருவி சிறகை படபடவென அடித்ததைப் போல இருந்தது குரலும் குருவி கத்துவதைப் போல இருந்ததால் யாரும் சொல்லாமலே எனக்கு அவரின் பெயர் காரணம் விளங்கியது. சோமுவைப் பார்த்தவர் டேய் நீயா பாஸாயிட்டியா நீ என்றார் ஆச்சரியமாக ஆமாம் சார் என்றான் பெருமையாக , இது எப்படி நடந்திருக்கும் என்று தீவிரமாக சிறிது நேரம் சிந்தித்தவாரே போர்டு அருகில் சென்று பாடம் எடுக்க ஆரம்பித்தார். இதற்குள் சோமு என்னிடம் சீரியஸாக எதைப்பற்றியோ பேச ஆரம்பித்திருந்தான் எங்களின் பேச்சு சத்தத்தைக் காதில் வாங்கியவ குருவி சோமு என்று சத்தமாக கூப்பிட்டார் எழுந்து குடுகுடுவென அவரருகில் சென்றவன் கூப்பிட்டிங்களா சார் என்றான் பவ்யமாக நின்றபடி , பேசிட்டுத்தான இருந்த உண்மைய சொல்லு என்று ஏதோ பல கோடி ரூபாய் ஊழலை கையும் களவுமாக பிடித்த தோரணையில் அவர் கேட்க கொஞ்சம் கூட பிகு பண்ணாமல் ஆமா சார் என்று சாதரணமாக ஒத்துக்கொண்டான். இவன் இப்படித்தான் ரியாக்ட் செய்வான் என்று எதிர்பார்த்தவர் போல் நீ கீழேயே உட்காரு அப்ப தான் புத்தி வரும் என்று தீர்ப்பு வழங்கினார். ஆனால் சோமு இதற்கெல்லாம் கவலைப்படும் ரகம் கிடையாது அவரது தீர்ப்புக்கு சிரித்தபடி தலைவணங்கி உடனே சமர்த்தாக சப்பணக்கால் போட்டு தரையில் அமர்ந்தான். ஒரு நிமிடம் குறுகுறுவென அவனையே பார்த்தார் பின்பு ஹும்ம் என்று பெருமூச்சு விட்டுவிட்டு பாடத்தை தொடர்ந்தவர் தீடீரென திரும்பி ஆமா நீ யார் கூட பேசிட்டிருந்த என்றார், இதற்காகவே காத்திருந்தவன் போல துள்ளி எழுந்து கார்த்தி சார் உன்னை தான் கூப்பிடறார் சீக்கிரம் வா என்றான் சந்தோஷம் பொங்க. நான் வீட்டில் ஆயிரம் அலும்பு பண்ணினாலும் ஸ்கூலைப் பொறுத்த வரை நான் இருக்குமிடமே தெரியாது எனவே இது போல் பகிரங்கமாக சிக்குவது இது தான் முதல் தடவையாகையால் தலை குனிந்தபடி அவர் முன்னே போய் நின்றேன் , டீயில் விழுந்த ஈயைப் பார்ப்பது போல் என்னை ஏற இறங்க பார்த்தவர் புதுசா என்றார், தலையை மட்டும் மெதுவாக ஆட்டினேன் , வந்த உடனே இவன் கூட சேர்ந்துட்டில்ல இனிமே உருப்பட்ருவ போ போய் நீயும் தரையில உட்காரு என்றார். மிக மிக அவமானமாக உணர்ந்த நான் மெதுவாக போய் தரையில் அமர்ந்தேன் , சோமுவோ எதைப்பற்றியும் கவலைப் படாமல் க்ளோஸப் விளம்பரத்தில் வருவது போல் சிரித்த முகத்துடன் காட்சி தந்துகொண்டிருந்தான் , என் முகத்தைப் பார்த்தவன் என்னடா டல்லாயிட்ட ரொம்ப பீல் பண்ணாத கிளாஸ் முடியும் போது பாரு என்றான் எனக்கு அப்போது புரியவில்லை அவன் அப்படி கூறியதன் , கொஞ்ச நேரம் சென்றதும் வகுப்பில் பேசிக்கொண்டிருந்த அனைவரையும் ஒவ்வொருவராக கீழே உட்கார சொல்லிக்கொண்டே வந்தார் குருவி , வகுப்பு முடியும் தருவாயில் நாலைந்து ஞானப்பழங்களைத் தவிர அனைவரும் கீழே தான் அமர்ந்திருந்தோம். என்னைப் பார்த்து சைகையிலே எங்களைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களைக் காட்டிய சோமு " என்னமோ சோகமா இருந்தியே இப்ப பார்த்தில்ல என்றான் " எனக்கும் இப்பொழுது அவ்வளவு அவமானமாக தோன்றவில்லை , குருஷேத்திர யுத்தத்தில் கிருஷ்ண பரமாத்மாவை பக்தியுடன் நோக்கிய அர்ஜூனனைப் போல சோமுவை நான் பார்க்க யாமிருக்க பயமேன் என்பதைப் போல் சிரித்தான் , அன்று முதல் அவனை விட்டு நான் பிரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
யோ இதுக்கு எதுக்கு கிருஷ்ண், அர்ஜுனனை இழுக்குறே
ReplyDelete