ஐயையோ ஆங்கிலமா

இருந்தாற்போலிருந்து தீடீரென என் தந்தைக்கு என் எதிர்காலத்தின் மீது ஏற்பட்ட கவலையின் விளைவால் என்னை தஞ்சையிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்த்து விட்டார். ஸ்கூலின் முதல் நாள் காலை புது யூனிபார்ம்,ஷூ, சாக்ஸ் என்று எல்லாவற்றையும் அணிந்து கொண்டு வீட்டின் அருகில் உள்ள ஸ்கூல் பேரூந்து நிறுத்தத்திற்கு வந்து நின்றேன். மெதுவாக திரும்பி வீட்டைப் பார்த்தேன் , அவுட் ஆப் போகஸில் என் தந்தை தெரிந்தார், கிட்டத்தட்ட கிரீடம் படத்தில் வரும் ராஜ்கிரன் போல் “கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே “ என்று பேக்க்ரவுண்டில் பாட்டு கேட்காத குறையாக பெருமையுடன் பார்த்தபடி நின்றார். என்னை ஏதோ IIT யிலோ, IIM யிலோ சேர்த்துவிட்டதைப்போன்ற திருப்தி அவருக்கு. ஆனால் நானோ பள்ளியின் முதல் நாள் என்பதால் கண்டிப்பாக பாடம் நடத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பஸ்ஸுக்காக காத்திருந்தேன் , பெருத்த சத்தத்துடன் பஸ் வந்து நின்றதும் ஏறி அமர்ந்தேன் , அது வரை அதிகபட்சம் சைக்கிள் ரிக்ஷாவை தாண்டியிராததால் முதல் முறையாக பஸ்ஸில் ஸ்கூலுக்கு செல்வது கொஞ்சம் பெருமையாக கூட இருந்தது ஆனால் ஸ்கூலை சென்றடைந்த நொடி அனைத்தும் மறைந்து பயம் தொற்றிக்கொண்டது. அவ்வளவு பிரம்மாண்டமான ஒரு கட்டிடத்தை நான் எதிர்பார்க்கவில்லை ஏறக்குறைய ஏதோ பொறியியல் கல்லூரியில் நுழைந்ததைப் போலிருந்தது எனக்கு. பள்ளியின் முதல் நாள் என்பதால் Principal ஆற்று ஆற்று என்று சொற்பொழிவாற்றினார் (இந்த கெட்ட பழக்கத்த எப்ப விடுவாங்கன்னு தெரியல), பள்ளியின் அருமை பெருமைகளை மூச்சுவிடாமல் ஒப்பித்து கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த பள்ளி தான் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தேவையான டாக்டர்களையும், இஞ்சினியர்களையும் , விஞ்ஞானிகளையும் உருவாக்குவதைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியபின்னர் பள்ளியின் சட்டதிட்டங்களுக்கு தாவினார். அதில் என்னை பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது நாளை முதல் அனைவரும் பள்ளியில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று அவர் கூறியது தான். மேற்கொண்டு சொல்வதற்கு முன் நீங்கள் என் ஆங்கில புலமையைப் ப்ற்றி அறிந்துகொள்வது மிகவும் அவசியம். அந்த நாட்களில் நான் பேய், பிசாசுகளுக்கு பயந்ததை விட ஆங்கிலத்துக்கு பயந்ததுதான் அதிகம். யாரேனும் what is your name? என்று சற்று அதட்டலாக கேட்டால் கூட எனக்கு வேர்த்து விறுவிறுத்து ஏறத்தாழ ஜுரமே வந்துவிடும் . இப்போது என் நிலைமையை சற்று எண்ணிப்பாருங்கள் , உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போலானது எனக்கு. அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை மறுநாள் காலையில் விடிந்ததும் விடியாததுமாக நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அடம் பிடிக்க இரண்டாவது நாளே ஆரம்பிச்சுட்டியா உதை விழும் மரியாதையா கிளம்பு என்று தலையில் தட்டி ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றி விட்டார்கள் . கனவில் நடப்பதை போல நடந்து சென்று வகுப்பில் ஏதோ ஒரு பெஞ்சில் அமர்ந்தேன் அருகில் யாருடனும் எதுவும் பேசவில்லை. வகுப்பில் யாருமே யாருடனுமே பேசவில்லை ( எல்லாருக்குமே ஆங்கிலத்தில் பேசுவது என்றால் பயம் என்று பின்னால் தான் தெரிந்தது). மதியம் லன்ச் இண்டர்வெலின் போது டிபன் பாக்ஸைத் தூக்கிக்கொண்டு எங்கு உட்கார்ந்து சாப்பிடுவது என்று சுற்றும் முற்றும் பார்த்தேன் , அருகில் இரண்டு பேர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் நான் பார்த்ததும் என்னை பார்த்து நட்பாக சிரித்தனர், உடனே அவர்கள் அருகில் சென்று அமர்ந்தேன். அவர்கள் இருவரும் தமிழில் பேசிக்கொண்டிருந்தது சற்று ஆறுதலாக இருக்கவே அவர்களையே கவனித்தபடி இருந்த எனக்கு ஸ்கூல் ப்ரின்ஸிபால் வந்து என் அருகில் நின்றது தெரியவில்லை யதேச்சையாக திரும்பி பார்த்தால் என்னையே முறைத்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தவர் என்ன நடக்கிறது என்று நான் யூகிக்கும் முன்னர் என்னைக் குனிய வைத்து படாரென்று முதுகில் ஒன்று வைத்தார் , எதற்கு என்று புரியாமல் அவரைப் பார்க்க They are talking in tamil , you are watching , you silly idiot என்றார். வாயில் இருந்த உணவை விழுங்கக் கூட நினைவில்லாமல் மனதிற்குள் “என்ன எல்லாரும் ஈஸியா அடிச்சுபுடுறீங்கடா “ என்று முனகிக்கொண்டு அவரையே பரிதாபமாக பார்த்தபடி நின்றேன். “Say Something “ என்று மறுபடியும் அதட்டினார் , அவரிடம் அடி வாங்கியதை விட இது அதிக அதிர்ச்சியை அளித்தது எனக்கு ஏனென்றால் அவரிடம் ஆங்கிலத்தில் பேசும் அளவு நான் என் ஆங்கில புலமையை இன்னும் விருத்தி செய்து கொள்ளவில்லை. ஒரு பெருத்த முயற்சிக்குப் பின் மெதுவாக Sorry Sir (எனது உச்சபட்ச ஆங்கில பிரயோகம்) என்றேன். don't do this again என்று உறுமிவிட்டு அதுவரை தமிழில் பேசிக்கொண்டிருந்த அந்த இருவரையும் ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டார். இந்த அநியாய தண்டனையின் ரணம் ஆறுவதற்கு எனக்கு வெகு நாள் ஆனது. தூக்கத்திலெல்லாம் அந்த பிரின்ஸிபாலிடம் “ குற்றமென்ன செய்தேன் கொற்றவா குற்றமென்ன செய்தேன் “ என்று செந்தமிழில் வாதாடுவது போல் கனவெல்லாம் வந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment