சோமுவின் சாகஸங்கள்

அதுவரை மிகவும் கண்டிப்பான ஆசிரியர்களையே சந்தித்து வந்த எனக்கு இந்த பள்ளியின் ஆசிரியர்களை மிகவும் பிடித்துப் போனது , என் வாழ்கையிலேயே முதல் முறையாக சந்தோஷமாக பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தேன், அதற்கு காரணம் சந்தேகமில்லாமல் சோமு தான். என்ன பிரச்சினை வந்தாலும் அவன் சமாளித்து விடுவான் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியாகவே பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தேன். குருவியிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது கிளாஸ் ஆரம்பித்ததுமே 50 கேள்விகளைப் படிப்பார் நாங்கள் பதில் எழுதிக்கொண்டே வரவேண்டும் , கடைசியில் நோட்டைப் பக்கத்தில் உள்ளவர்களிடம் மாற்றிக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் அவர் பதில்களை படிப்பார் நாங்கள் திருத்திக்கொள்ள வேண்டும் இது அன்றாடம் நிகழ்வது , அன்று நான் சுத்தமாக ஒன்றுமே படிக்காமல் வந்திருந்ததால் சோகமாக அமர்ந்திருந்தேன் வழக்கம் போல் சோமு காரணம் கேட்க (அவன் அப்படி கேட்க வேண்டும் என்று தான் முகத்தை கூடுமான வரை சோகமாக வைத்திருப்பேன்) நான் பரீட்சையைப் பற்றின பயத்தை விளக்கினேன், இதுக்கா கவலைப்படற நான் பார்த்துக்கறேன் விடு என்றான் வழக்கம் போல். குருவியின் வகுப்பும் வந்தது வயிற்றில் பயபூச்சி சிறகடிக்க உட்கார்ந்திருந்தேன் , அவர் கேள்விகளைப் படிக்க ஆரம்பிக்க திதிருவென முழித்தபடி ஏதோ ஒன்றை எழுதி வைப்போம் என்று நோட்டை திறக்க சோமு உடனே என் பேனாவை பிடுங்கினான் ,கேள்வியாக அவனைப் பார்க்க பேசாமல் உட்காரு என்றான் பயத்துடன் தலையை அசைத்தேன் ஒரு வழியாக ஐம்பது கேள்விகளையும் முடித்தவுடன் ம்ம் நோட்டை மாத்திக்குங்க என்றார் குருவி. சோமுவும் நானும் மட்டும் நோட்டை மாற்றிக்கொள்ளவில்லை , இரண்டு நோட்டுகளிலுமே ஒன்றுமே எழுதியிருக்கவில்லை வெறும் நோட்டை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் நான் முழிக்க இப்போ சார் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லிட்டே வருவாருல்ல அப்போ அதை எழுதி டிக் அடிச்சுட்டே வா ஆனா நாற்பது கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுது ஏன்னா ஐம்பது கேள்விக்கும் பதில் எழுதினா சந்தேகம் வரும் என்றான் ( இதிலெல்லாம் சோமுவை அடித்துக்கொள்வதில் ஆளே கிடையாது ). ஒரு வழியாக பதில்களை எழுதி முடித்து நோட்டை மாற்றிக்கொண்டோம். சோமுவின் நோட்டில் வெறும் இருபது கேள்விகளுக்கு மட்டுமே விடை இருந்ததைக் கண்டு திகைத்து ஏண்டா என்றேன் , நீ ஐம்பதுக்கு ஐம்பது எடுத்தா தான் சந்தேக படுவாரு ஆனா நான் ஐம்பதுக்கு இருபத்தியஞ்சுக்கு மேல எடுத்தாலே சந்தேகபடுவாரு என்று கண்ணடித்தான். இப்படி சோமுவின் சாகஸங்களால் நான் அநேக தடவை காப்பாற்றப்பட்டிருக்கிறேன். குருவிக்கு அவன் மேல் ஏதோ ஒரு பிரியம் இருந்ததை கவனித்திருக்கிறேன். ஒரு முறை நானும் அவனும் ஸ்டாப் ரூமை கடந்து செல்கையில் அவர் மட்டும் தனியே அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தார் அதை கவனித்த சோமு ஏதாவது தீனி சாப்பிடுவோமாடா என்றான் , டேய் என்கிட்ட காசு இல்லடா என்றேன் ,அதனாலென்ன இந்தோ இவரு எதுக்கு இருக்காரு என்றபடி நேரே குருவியிடம் சென்று சார் ஒரு அஞ்சு ரூபாய் இருந்தா கொடுங்க என்றான், பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு உயிரே போய்விடும் போல் இருந்தது ஒரு விநாடி அந்த இடத்தைவிட்டு ஓடி விடலாமா என்று கூட யோசித்தேன் ஆனால் குருவியோ சற்றும் பதட்டப்படாமல் எதுக்குடா அஞ்சு ரூபா என்று அதட்டினார் , தேன் மிட்டாய் வாங்கறதுக்கு சார் என்றான். அவனுடைய ரிப்ளெக்ஸில் அதிர்ந்து போனவர் என்னடா கொழுப்பா என்றார், சார் நிஜமா தான் சார் கேக்குறேன் நாளைக்கு திருப்பி கொடுத்துர்றேன் கொடுங்க என்றான். நான் என் கண்களையே நம்ப முடியாத அளவுக்கு ஒரு விஷயம் நடந்தது அப்போது, குருவி சிரித்துக்கொண்டே தன் பையில் கைவிட்டு ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவன் கையில் திணித்துவிட்டு உனக்கு இருக்கிற கொழுப்பு வேற யாருக்கும் வராதுடா என்றார். வெற்றி பெருமிதத்துடன் வெளியே வந்தவன் என்னிடம் கையை விரித்துக அந்த நாணயத்தைக் காட்டினான் ,ஏதோ பல கோடி ரூபாயைப் பார்ப்பது போல அதிசயமாக அந்த நாணயத்தைப் பார்த்தேன். சோமு எதற்கும் சோகமாக இருந்து நான் பார்த்ததில்லை அதே போல் ஆசிரியர்களும் அவனை ஒரளவுக்கு மேல் கண்டித்ததில்லை (அப்படியே கண்டித்தாலும் அவன் கவலைப்படப் போவதில்லை). எங்களுக்கு கணிதம் எடுக்கும் ஆசிரியர் சோமுவின் அளப்பரை தாங்க முடியாமல் அவ்வப்பொழுது சாக்பீஸ் துகள்களை கையில் எடுத்து என்னை இந்தப் பாடு படுத்தறதற்கு நீ வாத்தியாராத்தாண்டா போவ என்று சாபம் விடுவார். அவருடைய சாபத்திற்கு இவ்வளவு சக்தி இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை ஆம் சோமு தற்போது ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறான், சென்ற முறை ஊருக்கு சென்ற போது அவனோடு வேலை செய்யும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன் சோமுவைப் பற்றி விசாரித்தபோது “ பசங்களுக்கு சோமசுந்தரம் சார் மேல அப்படி ஒரு கிரேஸ் சார், அவர் மேலே நாங்கள்ளாம் பொறாமைபடற அளவுக்கு பிரியமா இருப்பானுங்க “ என்றார். “ A BAD STUDENT CAN BECOME A GOOD TEACHER “

No comments:

Post a Comment