உள்ளிருப்பு போராட்டம்

தலைப்பை படித்துவிட்டு அவசரப்பட்டு எதாவது முடிவு செய்துவிடாதீர்கள் இதற்கும் சுதந்திரபோரட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதில் முழுக்க முழுக்க பங்கேற்றது நான் மட்டுமே. சிறு வயதில் என் ஏரியாவில் நான் மிக மிக பிரபலம், உடனே ஆரோக்கியா பால் விளம்பரத்தில் வரும் அர்ஜூன் போல் என்னை கற்பனை செய்துவிட வேண்டாம் ஏனென்றால் நான் அதற்கு எதிர்மாறானவன். ஸ்கூலுக்கு போகாமல் அடம்பிடிப்பதால் தான் நான் அவ்வளவு பிரசித்தம்.ஸ்கூலுக்கு எப்படி மட்டம் போடுவது என்று நான் யோசித்த யோசிப்பில் நூற்றுக்கு பத்து சதவிகிதம் வேறு எதற்காவது யோசித்திருந்தால் இந்நேரத்திற்கு இரண்டு GSLV,மூன்று PSLV என்று விண்ணில் செலுத்தியிருப்பேன் ,அப்துல் கலாம்,கஸ்தூரிரங்கன்,மயில்சாமி அண்ணாதுரை இந்த வரிசையில் என் பெயரும் வந்திருக்கும். என் அம்மாவும் , அப்பாவும் என்னை ஸ்கூலுக்கு கிளப்பும் அழகை கிட்டதட்ட மொத்த ஏரியாவும் வேடிக்கை பார்க்கும். சரியாக ஸ்கூலுக்கு கிளம்பும் நேரத்தில் பாத்ரூமினுள் நுழைந்து கதவை தாழ் போட்டுக்கொள்வது எனது யுத்தகால தந்திரங்களில் ஒன்று. என்னை அந்த ரூமில் இருந்து வெளியேகொண்டு வரும் முயற்சியில் என் வீட்டின் அக்கம்பக்கத்தார் அனைவருமே கத்தி, கடப்பாரை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கலந்துகொள்வார்கள் (குறைந்தபட்சம் ஸ்க்ரு ட்ரைவராவது வைத்திருப்பார்கள்). ஆனால் கடைசிவரை அவர்களுக்கு வெற்றி கிட்டியதே இல்லை (பல மாத முற்றுக்கை போராட்டத்தை சந்தித்த கோட்டைக் கதவைப் போல சிதிலமடைந்த நிலையில் என் வீட்டு பாத்ரூம் கதவை இன்றும் காணலாம்). உச்சிவேளை நெருங்கும் சமயம் இனி இன்று ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டார்கள் என்று நிச்சயமான பின்னர் நானாக கதவை திறந்துகொண்டு சரண்டர் ஆகிவிடுவேன், அந்த ஒரு நிமிடத்திற்காக ஒரு பெரிய கும்பலே சிஸ்டாலிக் மற்றும் டையாஸ்டாலிக் (அப்படி என்றால் என்னவென்று உங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டுக்கொள்ளவும்) இரண்டும் ஏகத்திற்க்கு எகிறிப்போய் , கண்கள் சிவந்து வெறியுடன் தாக்குதலுக்காக காத்திருக்கும் , ஆனால் நான் கொஞ்சம் வின்னர் வடிவேலுவின் ரகம் எவ்வளவு அடி வாங்கினாலும் கத்தியதும் கிடையாது, ஓடியதும் கிடையாது. என் ஏரியா மக்கள் எல்லாரும் யார் யார் மீதோ உள்ள கோபதாபங்களை என்னிடம் வஞ்சனையின்றி காட்டிவிடுவதால் அவர்களில் எவருக்கும் பெரிதாக மன அழுத்தமோ , வேறு மனவியாதிகளோ வந்ததாக எனக்கு நினைவில்லை ,ஆகவே இந்த எனது உள்ளிருப்பு போராட்டத்தில் பொது நலமும் கலந்திருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு பாருங்க). பல பலத்த போராட்டங்களுக்குப் பின் ஒரு வழியாக தட்டுத்தடுமாறி ஐந்தாவது வகுப்பு வரை முடித்தேன். அதன் பின் தான் எனக்கு பிடித்தது ஏழரை , அதைப்ப்ற்றி அடுத்த தலைப்பில் பார்ப்போம்..............

1 comment:

  1. நாம்ம கஷ்டம் இவுங்களுக்கு எங்கப்பா புரியுது

    -Udaya

    ReplyDelete