கடந்து போன தீபாவளி பண்டிகையை நினைத்துப் பார்க்கிறேன் ,இப்பொழுதெல்லாம் தீபாவளி என்பது மற்றொரு நாள் அவ்வளவே , சிறு வயதில் தீபாவளி பண்டிகையில் எத்தனை உற்சாகம் இருந்தது, கடந்து போன ஆண்டுகளில் எப்படி இத்தனை அசுவாரசியம் வேர் விட்டது என வியப்பாக உள்ளது, ஒருவேளை சுவாரசியமற்று போவதின் பெயர் தான் வளர்ச்சியோ என்று தோன்றுகிறது . சிறு வயதின் தீபாவளி நினைவு வந்ததும் இதழோரத்தில் விரியும் புன்னகையை தவிர்க்க முடியவில்லை .தீபாவளி என்றதுமே என் நினைவில் வருவது இக்பாலின் முகம் தான் அவனில்லாத தீபாவளியை என்னால் நினைவு கூற இயலவில்லை அத்தனைக்கு என் இளமைக்காலங்கள் அவனுடன் பின்னிப் பிணைந்திருந்தது. நான் கூறப் போகும் சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன ஆனால் ஒவ்வொரு நிமிட நிகழ்வும் என்னுள் நிறைந்திருப்பதை உணரும்பொழுது வியப்பாக உள்ளது.
அப்பொழுது என் வீட்டின் அருகில் ஒருவர் குடியிருந்தார் (இப்பொழுதும் அவர் அங்கு தான் வசிக்கிறார் நான் தான் அங்கு இல்லை) , அவரது தொழில் என்னவென்று எங்கள் தெருவில் யாருக்குமே தெரியாது அவர் எதுவும் வேலை செய்தும் நாங்கள் பார்த்தது கிடையாது , வெடவெடவென்று ஒல்லியாக இருப்பார் தலையில் சொற்ப முடிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும் , மனிதரிடம் ஏராளமான செல்வம் இருந்ததாலும் மகா கஞ்சர் என்பது உலக பிரசித்தி அவரிடம் ஒரு காரும் ஒரு ஸ்கூட்டரும் உண்டு ஆனால் எப்பொழுதும் நடந்தோ அல்லது சைக்கிளிலோ தான் செல்வார். அவரிடம் இருந்த ஒரே நல்ல விஷயம் யோகாசனத்தில் அவருக்கிருந்த ஈடுபாடு மட்டுமே , காலையும் மாலையும் யோகாசன வகுப்புகளும் எடுத்து வந்தார் அவரிடம் யோகம் பயில எங்கள் தெருவில் உள்ளவர்கள் மட்டுமல்லாது வேறு எங்கெங்கிருந்தோவெல்லாம் தேடி வருவார்கள் இதனால் அவரை யோகாசன செட்டியார் என்றே எல்லாரும் அழைப்பார்கள் , அவரின் வகுப்புக்கு செல்லாத ஆட்கள் நானும் இக்பாலும் மட்டுமே இதனால் அவருக்கு எங்கள் மேல் சிறு வருத்தம் இருந்தது இது போதாதென்று இக்பால் வேறு அவ்வப்பொழுது cricket விளையாடுகிறேன் பேர்வழி என்று பந்தை அவர் காரின் மேல் அடித்து அவரது கோபத்திற்கு தூபம் போட்டுக்கொண்டிருந்தான் .இதனால் எங்கள் மேல் அவருக்கிருந்த வெறுப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது , இக்பால் அவரது இல்லத்தை கடந்து செல்லும்பொழுது வேண்டுமென்றே யாரையோ திட்டுவது போல அவர் அவனை திட்டுவது அவரது வாடிக்கையாக இருந்து வந்தது . இக்பாலும் அவர் வீட்டில் இல்லாத சமயங்களில் சுவரேறிக் குதித்து அவர் வீட்டின் பூ ஜாடிகளை உடைப்பது அவர் காரின் சக்கரத்தில் காற்று பிடுங்கி விடுவது போன்ற பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். இக்பாலின் அப்பாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் " உங்க பெரிய பையனும் சின்ன பையனும் பரவாயில்லங்க ஆனா நடுவுல ஒருத்தன் இருக்கான் பாருங்க அவன் தாங்க அறுந்த வாலா இருக்கான் என்று புலம்புவார் அதற்கு இக்பாலின் அப்பா நான் என்னங்க பண்றது நானும் திட்டியும் பார்த்துட்டேன் அடிச்சும் பார்த்துட்டேன் திருந்தவே மாட்டேன்கிறான் "என்று பதிலுக்கு புலம்பி அனுப்பி விடுவார் . செட்டியாருக்கு இக்பாலின் மேல் இருந்த அளவுக்கு என் மேல் விரோதம் கிடையாது காரணம் ஒவ்வொரு பண்டிகையின் பொழுதும் என் வீட்டில் இருந்து அவருக்கு பலகாரங்கள் சென்று விடுவது தான். நான் அவரிடம் தனியே சிக்கும் பொழுதெல்லாம் நீ அந்த பய கூட சேராத அப்புறம் நீயும் உருப்படாம போய்டுவ என்று அறிவுரை வழங்குவார் நானும் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு சரி அங்கிள் என்று பதவிசாக தலையாட்டுவேன் ஆனால் அடுத்த சில நிமிடங்களில் நான் இக்பாலுடன் ஊர் சுற்றுவதை பார்த்துவிடுவார் கழுதை கெட்டால் குட்டிச்சுவர் தான் என்று கண்டும் காணாமல் விட்டு விடுவார்.
அந்த மாதத்தின் மத்தியில் தான் தீபாவளி ஆனால் நானும் இக்பாலும் ஒரு மாதத்திற்கு முன்பிருந்து வெடிகள் வெடித்து தெருவில் ஒருவரையும் தூங்க விடாமல் செய்து வந்தோம், எங்கள் தொல்லை தாங்காமல் தெருவில் சில பெரிசுகள் நிரந்தரமாக காதில் பஞ்சு வைத்தபடி வலம் வந்து கொண்டிருந்தார்கள் , வழக்கமாக தீபாவளிக்கு இக்பாலுக்கும் நாங்கள் புதுத்துணி எடுத்து விடுவோம் அவன் ரம்ஜானுக்கு எனக்கு எடுத்து விடுவான் ஒருவழியாக தீபாவளி நாளும் வந்தது பொழுது விடிந்ததும் விடியாததுமாக குளித்து புது ஆடைகள் அணிந்து ஒரு சரவெடியை கொளுத்தி தீபாவளியை இனிதே துவக்கினோம் அந்த வழியாக வந்த அடுத்த வீட்டு பாட்டி " இவனுங்களுக்கு அலுக்கவே அலுக்காதா என்று யோசனையுடன் எங்களை கடந்து செல்லும்பொழுது "ஹாப்பி தீபாவளி பாட்டி" என்று இக்பால் கத்தியதும் அவரது முகம் உடனே மலர்ந்தது , தெருவில் செட்டியாரைத் தவிர மற்ற அனைவரிடமும் அவனால் நட்பு பாராட்ட முடிந்தது ஆச்சரியமே.தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்து வெடி வெடிப்பதால் எங்கள் கைவசம் இருந்த பட்டாசுகளின் இருப்பு காலை வெடிக்க மட்டுமே போதும் என்ற அளவில் இருந்தது மாலை என்ன செய்வது என்ற யோசனையில் இருந்த பொழுது அடுத்த தெருவில் இருந்த எனது மாமா வீட்டில் பட்டாசுகள் வெடிக்க அழைப்பு வந்தது அங்கு வெடிகளுடன் நாங்கள் மிகவும் விரும்பிய ராக்கெட்டும் இருந்ததால் எங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பானது பொழுது சாயும் வரை பட்டாசு கொளுத்தி விட்டு இருள் சூழ்ந்ததும் ராக்கெட் வைக்க தொடங்கினோம் .
முதல் வேலையாக ராக்கெட் வைக்க ஒரு பாட்டில் தேடினோம் , இக்பால் எங்கிருந்தோ ஒரு சோடா பாட்டிலை கண்டெடுத்து கொண்டு வந்தான் , ராக்கெட் வைக்கும் படலம் ஆரம்பமானது , முதல் ராக்கெட் கொளுத்தும் பொழுது அது சரியாக செல்லுமா என்று மனம் கிடந்து அடித்துகொள்ளும் பாருங்கள் அது கிட்டத்தட்ட அக்னி , பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை விண்ணில் செலுத்தும் பொழுது விஞ்ஞானிகளுக்கு ஏற்படும் படபடப்புக்கு இணையானது , முதல் ராக்கெட் விண்ணில் சீறி கிளம்பி சரியாக வெடித்ததும் எங்கள் உற்சாகத்திற்கு அளவே இல்லை அடுத்தடுத்து ராக்கெட்டுகளை வைக்க ஆரம்பித்தோம் சரியாக ஒன்பதாவது ராக்கெட் செல்லும்பொழுது சூடு தாங்காமல் சோடா பாட்டிலின் முனைப்பகுதி வெடித்தது , நல்ல வேளையாக அதற்குள் ராக்கெட் சரியாக மேல் நோக்கி சென்று விட்டது . கையில் கடைசி ராக்கெட் மிச்சமிருந்தது ஆனால் பாட்டில் உடைந்திருந்தது , இக்பால் கொஞ்சம் கூட அசராமல் அதே பாட்டிலில் கடைசி ராக்கெட்டை வைக்க முடிவு செய்தான் , வழக்கம் போல் பயந்த நான் " டேய் வேண்டாம்டா " என்று தடுக்க என்னைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் ராக்கெட்டை அதில் வைத்தான் அது லேசாக சரிவாக இருப்பது போல் இருந்தது , வழக்கம் போல் நான் சொல்வதை அவன் கேட்காததால் எனக்கொன்றும் பெரிய வருத்தம் இல்லையானாலும் என்னாகுமோ என்ற பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். இக்பால் சாய்வாக நிறுத்தியிருந்த ராக்கெட்டை கொளுத்தி விட்டு வேகமாக ஓடி வந்து என் அருகில் நின்று கொண்டான் அப்பொழுது தான் நாங்கள் எதிர்பாராத அந்த சம்பவம் நிகழ்ந்தது , திடிரென்று தெரு முனையின் திருப்பத்தில் இருந்து செட்டியார் தோன்ற , இக்பால் கொளுத்தி வைத்திருந்த ராக்கெட் கிளம்பும் நேரத்தில் முழுவதுமாக சரிந்து சரியாக குறி வைத்தாற்போல் செட்டியாரைப் நோக்கிச் சென்றது , சீறி வரும் ராக்கெட்டை பார்த்து மிரண்டு போனவர் கண நேரத்தில் அனிச்சை செயலாக தலையை சற்றே திருப்பியதால் ராக்கெட் அவரது காதை உரசி சென்றது , நிலைமையின் தீவிரத்தை வழக்கம் போல் நான் தாமதமாக உணர அதற்குள் இக்பால் சுவரேறிக் குதித்து எனது மாமா வீட்டின் உள்ளே புகுந்திருந்தான் . தப்புவதற்கு நான் முயற்சி எடுக்கும் முன்னர் செட்டியார் என்னை நெருங்கியிருந்தார் அவரின் கட்டுக்கடங்காத கோபத்தை எதிர்பார்த்திருந்த எனக்கு அவரின் சிரித்த முகம் குழப்பத்தை உண்டு பண்ணியது , என்னை நெருங்கியவர் " என்ன கார்த்திக் உன் சொந்தக்கார பையனா அது உள்ள ஓடினது என்று கேட்டார் அப்பொழுது தான் அவருக்கு அது இருட்டில் இக்பால் என்று தெரியவில்லை என்று எனக்கு புரிந்தது மெதுவாக ஆமா அங்கிள் சாரி அங்கிள் ராக்கெட் சாஞ்சு போய்டுச்சு அங்கிள் என்றேன் , தீபாவளின்னா இதெல்லாம் சகஜம் தான் அந்த பையன பயப்பட வேண்டாம்னு சொல்லு நான் ஒன்னும் தப்பா நினைக்கலன்னு சொல்லிடு என்று சிரித்து விட்டு சென்றார் , நான் ஆச்சரியம் தாங்காமல் அவர் போன திசையை பார்த்து கொண்டிருக்க இக்பால் அவர் பேசியதை சுவரோரமாக நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தவன் அவர் சென்றதை உறுதிபடுத்திக் கொண்டு மெதுவாக என் அருகில் வந்து நின்றான் , பார்த்தியாட அந்த அங்கிள் எவ்வளவு பெருந்தன்மையா பேசிட்டு போறாருன்னு என்றேன் அதற்கு அவன் ரொம்ப உருகாதடா உங்க அங்கிளுக்கு ராக்கெட் வச்சது நான் தான்னு தெரிஞ்சுருக்கனும் அப்போ தெரியும் அவரோட பெருந்தன்மை என்று கூறிவிட்டு அவர் சென்ற திசையை நோக்கி யோசித்தவாறு நின்றிருந்தான் என்னடா யோசிக்கிற என்று நான் கேட்க ஒன்னும் இல்ல மாப்புள கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு ராக்கெட்ட மட்டும் இன்னும் கொஞ்சம் கீழ இறக்கி வைச்சிருந்தா போதும் இன்னையோட எல்லா பிரச்சினையும் முடிஞ்சுருக்கும் என்றான் ( உஹும் திருத்தவே முடியாது !!!) .
awesome:)..ungaluku ivlo tamil theryuma?
ReplyDelete