நீச்சல் குளம்


வயது கூடக்கூட புதிய விஷயங்களில் ஈடுபடும் ஆர்வம் குறைந்து வருவதை உணர முடிகிறது , சிறிய வயதில் புதிய விஷயங்களை கற்கும் ஆர்வம் மிக அதிகமாக இருந்ததை தற்பொழுது எண்ணிப் பார்க்கிறேன் , மனதிற்கு பிடித்த அத்தனை விஷயங்களையும் முயன்றிருக்கிறேன், அநேகமாக எனது எல்லா முயற்சிகளிலும் இக்பாலும் உடனிருந்திருக்கிறான். இளம் வயது நினைவுகளை எண்ணுகையில் மனதிற்கு நிறைவாகவே இருக்கிறது அடைமழையில் கப்பல் செய்து விடுவதில் தொடங்கி கோடையில் பட்டம் செய்து விடுவது வரை (பட்டம் செய்வதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதும் அளவுக்கு அதில் நிறைய விஷயங்கள் உள்ளன) எதையும் நாங்கள் விட்டதில்லை ஒரு முறை வீட்டிற்கு அருகில் உள்ள புதரில் ஒரு நல்ல பாம்புக் குட்டி ( குட்டி தான் ) எங்களிடம் சிக்கிவிட அதை வைத்து கூட விளையாடினோம். இக்பாலுடனான எனது ஃபுட் பால் விளையாட்டு படு தோல்வியை அடைந்ததை தொடர்ந்து எனது அடுத்த இலக்கு நீச்சல் கற்றுக்கொள்வது என்று முடிவு செய்தேன். எனது முடிவை இக்பாலிடம் தெரிவித்தவுடன் வழக்கம் போல் மறுவார்த்தை பேசாமல் அதற்கான முயற்சிகளில் இறங்கினான்.
அந்நாளில் தஞ்சையில் இருந்தது ஒரே ஒரு நீச்சல் குளம், பெயர் குந்தவை நீச்சல் குளம் குந்தவை இராஜராஜ சோழனின் தமக்கை அவரது பெயரை எதற்கு நீச்சல் குளத்திற்கு வைத்தார்கள் என்ற சந்தேகம் இன்று வரை எனக்கிருக்கிறது. ஒரு மணி நேரம் நீந்துவதற்கு 10 ரூபாய் கட்டணம் என்று கேள்வி பட்டவுடன் இக்பால் சிறிது தயங்கினான் காரணம் நீச்சல் குளத்திற்கு போக அவன் அப்பாவிடம் பணம் கேட்டால் அவரது புனிதமான பாத இரட்சைகளால் அடிவிழும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும் எனவே என் அப்பாவிடமே இருவருக்குமான பணத்தைப் பெற்று ( இந்த விஷயங்களில் என் தந்தையை பாராட்டியே ஆக வேண்டும் வீட்டில் என் தொல்லை இல்லாமல் இருப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பார் ) சைக்கிளில் நீச்சல் குளத்தை அடைந்தோம்.
நீச்சல் குளம் முறையே நாலரை அடியில் ஆரம்பித்து பனிரெண்டு அடி வரையில் இருந்தது,  எங்களைப் போன்ற கற்றுக்குட்டிகள் எடுத்தவுடன் பனிரெண்டு அடியில் நீந்த அனுமதிக்க பட மாட்டார்கள் , நீச்சல் தெரியாததால் ஆறடியில் கூட முழுகிவிட வாய்ப்புள்ளதால் எங்களை நாலரை அடியை தாண்ட விட மாட்டார்கள் , போதுமான அளவு நீச்சலில் தேரிய பின்னர் தான் ஆழமான பகுதிகளில் நீந்த அனுமதி தருவார்கள் , இதை கண்காணிக்க இருவர் நீச்சல் குளத்தை சுற்றி வந்தபடி இருப்பார்கள் போன்ற விஷயங்களை அறிந்து கொண்டோம். இரண்டு பேருக்குமான பணத்தைக் கட்டிவிட்டு குளத்தை நெருங்கினோம் எங்களுக்கு முன்னரே சிலர் அந்த குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். குளத்தில் இறங்காமல் ஒரமாகவே நடந்து நேராக பனிரெண்டு அடிக்கு அருகில் போய் நின்றோம் அங்கு ஒருவர் மிக வேகமாக நீந்திக்கொண்டிருந்தார் அவரையே வைத்த கண் மாறாமல் நானும் இக்பாலும் உற்றுப் பார்க்கவும் வேறு வழி இல்லாமல் எங்களைப் பார்த்து லேசாக சிரித்ததன் மூலம் மிகப்பெரிய தவறை செய்தார் ஏனெனில் நானும் இக்பாலும் இது போல் எங்களிடம் ஒருவர் சிநேகமாக சிரித்தால் அவரை குறைந்தது அரை மணி நேரம் ப்ளேடு போட்டுவிட்டுத்தான் விடுவோம் . நீச்சலின் நுணுக்கங்களைப் பற்றி அவரிடம் பல கேள்விகளை கேட்ட பிறகு தோராயமாக எத்தனை நாளில் நீச்சல் கற்றுக் கொள்ளலாம் என்று நான் கேட்க தண்ணீருக்குள் இருக்கும்பொழுதே மனிதர் சூடாகி (பாவம் அவரது ஒரு மணி நேரத்தில் எங்கள் கேள்விகளுக்கு பதில் கூறியதிலேயே அரை மணி நேரத்தை செலவிட்டிருந்தார்) ரெண்டு பேரும் இப்படியே கேள்வி கேட்டுகிட்டிருந்தா ஒரு வருஷம் ஆனாலும் நீச்சல் கத்துக்க முடியாது நீச்சல் கத்துக்கனும்னா மொதல்ல தண்ணில இறங்கனும் அதுவும் இது பனிரெண்டு அடி இங்க இறங்க கூடாது அதோ அங்க தெரியுது பாரு அங்க இறங்கனும் அங்க தான் ஆழம் கம்மியா இருக்கும் என்றார். பயபுள்ள இப்படி அசிங்கபடுத்திடுச்சே என்று மனதிற்குள் கறுவிக்கொண்டு, இன்னும் ஒரு மாசத்துல நீச்சல் கத்துகிட்டு உன் முன்னால இதே பனிரெண்டு அடில நீச்சல் அடிக்கல என் பேரூ...என்று அண்ணாமலை ரஜினிகாந்த் போல் தொடையைத் தட்டி (மனதிற்குள் தான்) மானசீகமாக ஒரு சபதத்தை எடுத்துவிட்டு திரும்பினால் இக்பாலும் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு நின்றிருந்தான் அவன் மனதிலும் அதே அண்ணாமலை சபதக்காட்சி ஒடிக்கொண்டிருந்தது தெளிவாக தெரிந்தது. இருவரும் ஒருவழியாக நீச்சல் குளத்து நீரில் கால் வைத்தோம் , இவ்வாறாக நீச்சல் குளத்துடனான எங்கள் நட்பு இனிதே துவங்கியது.
அடுத்து வந்த நாட்களில் எங்களுக்கு நீச்சல் குளத்திற்கு பணம் தருவதற்காக பெர்சனல் லோன் போடலாமா என்று என் தந்தை சிந்திக்குமளவுக்கு நீச்சல் குளமே கதியென்று இருந்தோம் இருவரும் , நாங்களே ஆச்சரிய படுமளவுக்கு விரைவாகவே நீச்சல் பயின்று எங்களின் கனவான பனிரெண்டடி ஆழத்தில் நீந்த அனுமதியும் பெற்றோம் (பின்னாளில் கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து நாற்பது ஐம்பது அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி நீந்தியிருக்கிறேன்). அந்த நேரத்தில் தான் வழக்கம் போல் என் ஜாதகம் வேலை செய்ய ஆரம்பித்தது, ஆயிரம் யானையை கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடுவது தான் பரணி என்பார்கள் அது போல் ஆயிரம் முறை கீழே விழுந்து அடி பட்டவனை பாடுவதாக இருந்தால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அதற்கு தகுதியானவன் நானாக தான் இருப்பேன் சிறு வயதில் அத்தனை முறை அடிபட்டு உடல் முழுவதும் விழுப்புண்களை சுமந்து கொண்டிருக்கிறேன். நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் பொழுது கீழே உடைந்திருந்த டைல்ஸ் எனது கால் விரலைக் கிழித்து குபுகுபுவென இரத்தம் பரவ ஆரம்பித்தது . நீச்சல் குளத்திலிருந்து வெளியே வந்த பின் தான் காயத்தின் ஆழம் தெரிய வந்தது. எனக்கோ இக்பாலுக்கோ இரத்தம் ஒன்றும் புதிய விஷயம் அல்ல காரணம் நான் முன்பே சொல்லியிருந்ததைப் போல இக்பால் சகோதரர்களுடனான சண்டையில் அநேகமாக இரண்டு நாளைக்கு ஒருமுறை இரத்தம் பார்த்து விடுவான் அதே போல் நானும் வாரம் ஒரு முறையாவது விழுப்புண்களை பெற்று விடுவேன் ஆகையால் நாங்களிருவரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை ஆனால் நீச்சல் குளத்தில் எங்களை சுற்றி இருந்தவர்கள் எங்களிருவரின் வரலாறு தெரியாததால் அநியாயத்துக்கு பதறினார்கள் அதனால் முதல் முறையாக நாங்கள் ஒரு மணி நேரம் முடியும் முன்பே நீச்சல் குளத்தை விட்டு வேண்டாவெறுப்பாக கிளம்ப வேண்டியதாயிற்று இல்லையென்றால் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒரு மணி நேரம் முடியும் முன்னர் வெளியேற மாட்டோம் அதிலும் இக்பால் ஒரு மணி நேரம் முடிந்த பின்னும் அண்ணே அண்ணே என்று கெஞ்சிக்கெஞ்சி இன்னொரு கால் மணி நேரம் இழுத்து விடுவான் இதனால் எங்கள் இருவரையும் தண்ணீரில் இறங்கும் முன்னரே அங்குள்ள கண்காணிப்பாளர் ஒரு மணி நேரம் முடிஞ்சதும் மேல வந்துடனும் சரியா என்று மிரட்டிவிட்டுத்தான் இறங்க விடுவார்.. பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் தொடர்கிறேன். 

No comments:

Post a Comment