இக்பாலுடன் ஃபுட்பால்

பல சமயங்களில் நாம் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகள் நமக்கு அவ்வளவாக நன்மை பயப்பதில்லை , அது போன்ற ஒரு முடிவு தான் நான் இக்பாலுடன் ஃபுட்பால் விளையாட சென்றது. பொதுவாக யார் என்ன கிண்டல் செய்தாலும் எருமை மாட்டின் மேல் மழை பெய்தது போல சென்று விடுவது என் வழக்கம் , அன்றும் அதே போல் செய்திருக்கலாம் ஆனால் விதி யாரை விட்டது தசரத மைந்தனை காட்டுக்கு அனுப்பிய விதி , கோவலனை மதுரைக்கு இழுத்த விதி , என்னையும் என் கைப்பிடித்து தரதரவென்று ஃபுட்பால் கிரவுண்டை நோக்கி இழுத்து சென்றது. எப்பொழுதும் தனியே ஃபுட்பால் விளையாட செல்லும் இக்பால் அன்று தீடீரென்று என் வீட்டுக்கு வந்து வாடா ஃபுட்பால் விளையாட போகலாம் என்றான் , நான் வரவில்லை என்று கூற வாயெடுக்கும் முன் என் அப்பா " ஏண்டா அவனுக்கு ஃபுட்பால் கைல விளையாடறதா இல்ல கால்ல விளையாடறதான்னே தெரியாது அவன ஏண்டா கூப்பிடுற " என்றார். அவர் அப்படி ஒன்றும் உண்மைக்கு புறம்பாக எதுவும் கூறி விடவில்லை, எனக்கு ஃபுட்பாலைப் பொறுத்த வரை அது காலால் உதைத்து விளையாடுவது என்ற அளவுக்கு மட்டுமே ஞானம் உண்டு, ஆனாலும் உண்மை எப்பொழுதுமே சுடுமாகையால் என் அப்பா கூறிய உண்மை என்னை 99 ° டிகிரி செல்சியஸ் அளவுக்கு சுட்டது , அமைதியாக தண்ணீரைக் குடித்துவிட்டு படுத்திருக்கலாம் தான் ஆனால் கலிங்கத்து பரணி கண்ட தமிழ் மரபில் பிறந்ததால் அந்த அவமானத்தைப் பொறுக்க முடியாமல் உணர்ச்சி வசப்பட்டு துணிந்து ஃபுட்பால் விளையாட கிளம்பியது தான் நான் செய்த மிகப்பெரிய முட்டாள்தனம்.


ஃபுட்பால் மைதானத்தை நெருங்கியதும் தான் லேசாக கவலைப்பட ஆரம்பித்தேன் , அங்கு ஒரு கும்பலே விளையாடத் தயாராக இருந்தது ,ஏறத்தாழ அனைவருமே எனக்கு தெரிந்தவர்கள் தான், நான் ஃபுட்பால் விளையாட வந்திருப்பது தெரிந்து கர்நாடகாவில் இருந்து காவிரி நீரே வந்தது போல் பூரித்துப் போனார்கள். கூடியிருந்த அனைவரும் இரு அணிகளாக பிரிந்தார்கள் ஒரு அணியின் கேப்டன் இக்பால் என்பதால் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து என்னை அவன் அணியில் இணைத்துக் கொண்டான். சற்று நேரம் இரு அணியினரும் டிஃபன்ஸ்,அஃபன்ஸ் என்று ஏதேதோ டெக்னிக்கலாக பேசினார்கள் , ஏதோ ஒரு வேகத்தில் கிளம்பி வந்துவிட்டேனே தவிர இவர்களுடன் எப்படி சரி சமமாக விளையாட போகிறோம் என்று கவலையாக இருந்தது. மேலே கூறுவதற்கு முன் இக்பாலின் பொழுதுபோக்குகளைப் பற்றியும் , தனித்திறமைகளைப் பற்றியும் நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் . எங்கள் தெருவில் தெருநாய்கள் கொஞ்சம் அதிகம் , இதனால் இக்பாலின் முக்கிய பொழுதுபோக்கு நாய்களைக் கல்லெறிந்து விரட்டுவது தான் அதுவும் கொஞ்சம் பயந்த நாய் என்று தெரிந்துவிட்டால் பக்கத்து தெருவரை அதை விரட்டி விட்டுத்தான் வருவான். பெரும்பாலும் ஒன்று அவன் நாயைத் துரத்திக்கொண்டிருப்பான் இல்லை ஏதாவது ஒரு நாய் அவனைத் துரத்திக்கொண்டிருக்கும்(ஒரு தடவை கடியும் பட்டிருக்கிறான்).எப்பொழுதும் நாய்களை விரட்டுவதற்காக சட்டைப்பையிலும் , ட்ரவுசரிலும் ஒரு வீடு கட்ட தேவையான அளவுக்கு கற்களை நிரப்பி வைத்திருப்பான். இந்த நாய் துரத்தும் படலத்தால் அவனுக்கு ஒரு எதிர்பாராத நன்மையும் இருந்தது அது தான் அவனது ஒட்டத்தின் வேகம் , சதா நாய்களோடு நாலுகால் பாய்ச்சலில் ஒடுவதால் இயல்பாகவே அவனுடைய ஒட்டத்தின் வேகம் அதிகரித்திருந்தது. இது அவனுடைய விளையாட்டுக்கு பெரிதும் துணைபுரிந்தது, ஃபுட்பாலில் பந்து அவனிடம் சிக்கிவிட்டால் பின்பு அவனிடம் இருந்து பந்தை பிடுங்குவது என்பது மிகவும் கடினம் கோல் போட்டுவிட்டுத்தான் ஒய்வான். தினந்தோறும் அவனுடன் விளையாடுபவர்களே அவனுடன் சரிசமமாக ஒட முடியாமல் திணறுவார்கள் நானோ ஒரே ஒருமுறை தான் என் வாழ்க்கையில் வேகமாக ஒடியிருக்கிறேன் அது எப்பொழுதென்றால் நானும் இக்பாலும் ஒருமுறை தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது அவனால் முன்பு எப்பொழுதோ தாக்கப்பட்ட ஒரு நாய் பழி வாங்கும் பொருட்டு எங்களை துரத்திய போது தான். ஆங்கிலத்தில் core competency என்று ஒரு வார்த்தை உண்டு அதாவது நமக்கு எது நன்றாக வருமோ அதை மட்டும் ஒழுங்காக செய்வது என்று சுருக்கமாக பொருள் கொள்ளலாம் , அதை செயல்படுத்த முடிவு செய்தேன் நேராக இக்பாலிடம் சென்று "டேய் நான் கோல் கீப்பரா இருக்கேன்டா" என்றேன்.



பந்தின் பின்னால் தலைதெறிக்க ஒடுவதை தவிர்க்க நான் எடுத்த முடிவு தான் இந்த கோல் கீப்பர் ஆர்வம் என்பதை அறியாதவனாக " வெரி குட் , வெரி குட் எடுத்தவுடனே கோல்கீப்பரா நிக்கறதுக்கும் ஒரு தில்லு வேணும் டா என்றான் " ( அணியின் கேப்டன் என்ற முறையில் என்னை உற்சாக படுத்துகிறானாம் ). ஆட்டம் ஆரம்பமானது நான் எதிர்பார்த்தைப் போலவே ஆட்டத்தில் இக்பாலின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது , பந்து எங்கள் கோல்போஸ்ட்டின் பக்கமே வரவில்லை பெரும்பாலும் எதிரணியினரின் கோல்போஸ்ட்டை நோக்கியே சென்று கொண்டிருந்தது, ஆகையால் நான் கோல் கீப்பர் என்பதை மறந்து கிட்டதட்ட பார்வையாளர்களைப் போல் ஆட்டத்தை சுவாரசியமாக பார்த்துக்கொண்டு நின்றேன். அந்த மைதானம் என் வீட்டின் நேரேதிரே இருக்குமாதலால் என் தந்தை எப்பொழுதும் எங்கள் வீட்டின் பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தபடி இருப்பார், இது ஞாபகம் வரவே என்னை அறியாமல் கோல்போஸ்ட்டின் பின்னே சற்று நகர்ந்து என் வீட்டை திரும்பி பார்த்தபடி நின்றேன் ,ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு கருங்கற்களை வைத்திருப்பதைத்தான் கோல்போஸ்ட் என்று இவ்வளவு நேரம் மரியாதையாக கூறி வந்தேன் எனவே நான் அதை கவனிக்காமல் பின்னே நின்றது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை தானே, அப்பொழுது தீடீரென்று " கார்த்திக் பால் வருது பாருடா" என்று சத்தமாக இக்பாலின் குரல் கேட்டது திரும்பினால் பந்து கிட்டத்தட்ட எங்கள் கோல்போஸ்ட்டை நெருங்கிவிட்டது, ஃபுட்பாலுடனான எனது முதல் ஸ்பரிசம் நிகழப்போகிறது , நெருங்கும் பந்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்ற ஆவேசம் தலைக்கேற , உடம்பு முழுவதும் அட்ரினலின் ( Adrenalin ) சுரக்க ( அட்ரினலின் சுரந்தால் என்ன ஆகும் என்று கூகிலில் தேடவும் ) மிகுந்த வேகத்துடன் பந்தை நெருங்கி என் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி ஒங்கி ஒரு உதை விட்டேன். ஒரு வினாடி மூளையில் மின்னல் வெட்டினாற் போல் இருந்தது , உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை வலி பரவியது , ஒரே ஒரு உதை உதைத்தற்கே இப்படி வலிக்கிறதே இதை எப்படி தொடர்ந்து உதைக்கிறார்கள் என்று அவ்வளவு வலியிலும் மனதில் தோன்றியது. என்னால் எனது வலது காலை அசைக்க கூட முடியவில்லை , என்ன நடந்தது என்றும் மூளையில் உரைக்கவில்லை இக்பாலின் குரல் தான் என்னை சுய நினைவுக்கு கொண்டு வந்தது " என்னடா இப்படி பண்ணிட்ட பார்த்து விளையாடக் கூடாதா " என்றான். அப்பொழுது தான் என்ன நடந்திருக்கிறது என்றே எனக்கு விளங்கியது ஏன் அவ்வளவு வலி வலித்தது என்றும் புரிந்தது. எப்படியாவது கோல் போடுவதை தடுத்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் வேகமாக ஒடி வந்த நான் பந்தை விட்டுவிட்டு கோல்போஸ்டுக்கு வைத்திருந்த கருங்கல்லை ஒங்கி உதைத்திருக்கிறேன். கால் விரல் முழுவதும் தோல் உரிந்து இரத்தம் , இக்பால் என்னை கைத்தாங்கலாக வீட்டிற்கு அழைத்து வந்தான் , வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்த என் தந்தை என்னைப் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டு அக்கரையாக கூறுவது போல் "நான் போகும்போதே சொன்னேன் நீ தான் கேட்கல உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை " என்றார்.

2 comments:

  1. எழுத்து துறையிலும் உன்னுடைய வளர்ச்சி வேகமாகவும், பிரமிக்கவும் வைக்கிறது.

    ReplyDelete
  2. சமகால இலக்கியத்தில் எனக்கிருக்கும் முக்கியத்துவத்தை எனக்கு தினமும் வந்து சேரும் ஓலைகள் வழியாகவே அறிந்து கொள்ளலாம். சிலர் கல்லில் பொறித்தும் அனுப்புகிறார்கள். சிலர் உலோகத் தகடுகளில் பதிக்கிறார்கள். திரும்பத் திரும்ப நான் சொல்வது ஒன்றுதான் என் பெயர் தங்கத் தகட்டிலே மட்டுமே பதிக்கப்படவேண்டியது. மற்ற பொருட்களில் பதிப்பவர்கள் என்னை அவமதிக்கிறார்கள். குறிப்பாக காய்ந்த வாழை இலையில் கரித்துண்டைக் கொண்டு எழுதி அனுப்பிய விஷமிக்கு என் கண்டனங்கள். Very very nice karthi. I am enjoying

    ReplyDelete