முதல் நண்பன்
நியாயமாக என்னுடைய முதல் பதிவு எனது நண்பன் இக்பாலைப் பற்றியதாகத்தான் இருந்திருக்க வேண்டும் ஏனெனில் நான் தவழ்ந்த காலத்திலேயே என்னுடன் சேர்ந்து தவழ்ந்தவன் இவன்.அந்த நாட்களில் படிப்பிலும் , விளையாட்டிலும் இவனை அடித்துக்கொள்வதற்கு ஆளே கிடையாது ஆனால் எனக்கோ இது இரண்டுமே எட்டாம் பொருத்தம் ( அது மேலே உள்ள பதிவுகளை படித்த உடனே உங்களுக்கு புரிந்திருக்கும் ) , இயல்பில் நாங்கள் இருவரும் எதிரெதிர் துருவங்களானாலும் எங்களுக்கிடையே இருந்த நட்பின் ஆழம் அனைவரையும் ஆச்சரியபட வைத்திருக்கிறது .எனக்கும் அவனுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை நாங்கள் இருவருமே எங்கள் வீடுகளில் எகனைமுகனையாக எதையாவது செய்து மாட்டிக்கொண்டு அடி வாங்குவோம். இக்பாலுக்கு ஒரு அண்ணனும் ஒரு தம்பியும் உண்டு , ஒரு வீட்டில் மூன்றும் ஆண்பிள்ளையாக பிறந்தால் என்னென்ன தொல்லை வரும் என்று இக்பாலின் அம்மாவிடம் கேட்டால் ஒரு புத்தகம் எழுதுவதற்கு தேவையான விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும். அவன் வீடு சண்டைச்சச்சரவு இல்லாமல் அமைதியாக இருந்தால் அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும் , அது அவர்கள் மூன்று பேரும் வீட்டில் இருந்திருக்கமாட்டார்கள் , மற்றபடி தூக்கத்தில் கூட மூன்று பேரும் சண்டை போட்டபடி தான் இருப்பார்கள்.பொதுவாக இவர்களுக்கிடையே வரும் பிரச்சினைகளின் தீவிரம் இ.பி.கோ வில் வரும் மொத்த செக்க்ஷங்களுக்கும் , அட்டார்னி ஜெனரல்களுக்கும் கூட அப்பாற்பப்பட்டதாகையால் இவர்களின் அம்மா பல வழக்குகளுக்குத் தீர்ப்பு கூறாமல் நிலுவையிலேயே வைத்துவிடுவார்கள், இதனால் இவர்கள் அடிக்கடி தங்களுக்குள் பலப்பரீட்சையில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுவதால் மூவரில் ஒருவருக்காவது பலத்த சேதாரம் ஏற்பட்டு முடிவில் ஒரு தையலோ,மாவுக்கட்டோ போடும் அளவுக்கு ஆகிவிடும். இது வாடிக்கையாக நடைபெறுவதால் எங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் எலும்பு முறிவு மருத்துவரும் இக்பாலின் அப்பாவும் மிகவும் நெருக்கமாகி ரம்ஜானுக்கு பிரியாணி கொடுத்துனுப்பும் அளவுக்கு நட்பாகிப்போனார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பெரும்பாலும் அங்கு நடக்கும் பிரச்சினைகளுக்கு நதிமூலம் ரிஷிமூலம் தேடினால் இக்பால் தான் காரணம் என்று சுலபமாக தெரிந்துவிடும் இதனால் அவனுக்கு விழும் அடிகளும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் அந்த சமயங்களில் அவன் தந்தையின் கைகளில் அவன் சிக்குவதில்லை , இதற்காகவே அமைந்ததைப்போல் அவன் வீட்டுக்கொல்லைப்புறத்தில் காம்பௌண்ட் சுவரை ஒட்டினார்போல் பக்கத்து வீட்டின் கார் ஷெட் இருந்தது . ஒசாமா பின்லேடனுக்கு எப்படி ஒரு ஹிந்துகுஷ் மலைப்பகுதியோ அது போல் இக்பாலுக்கு அந்த கார்ஷெட்டின் மேல் தளம் , அவன் தந்தையால் அணுக முடியாததும் அந்த இடம் தான் , காரணம் கிணற்றின் மீது ஏறினால் தான் அதன் மேல் தளத்தைச்சென்றடைய முடியும், இக்பாலின் அப்பாவுக்கோ ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுக்களில் ஆர்வமிருந்ததாக தெரியவில்லை அது போக அந்த இடத்தைச் சுற்றிலும் ஏராளமான பாம்பு புற்றுகள் வேறு (அந்த புற்றுகளில் நாக்கு பூச்சி கூட கிடையாதென்ற ரகசியம் இன்று வரை எனக்கும் இக்பாலுக்கும் மட்டுமே தெரியும்) . ஆகையால் இக்பால் தன் மீதான தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே தாவிக்குதித்து இந்த இடத்தில் பதுங்கிவிடுவான் , எவ்வளவு நேரமானாலும் அந்த இடத்தின் அருகில் வர அவன் அப்பாவுக்கு தைரியம் இருந்ததில்லை தூரத்தில் இருந்தே இறங்கி வருமாறு மிரட்டிக்கொண்டிருப்பார். இக்பாலின் விளையாட்டு ஆர்வத்தைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும், கிரிக்கெட் , ஃபுட்பாலில் இருந்து ரம்மி வரை ஒரு விளையாட்டுகளையும் விடுவதில்லை ( எனக்கு திருடன் போலீஸ் , பம்பரம் விடுதல் போன்ற உலகப்பிரசித்திப் பெற்ற விளையாட்டுக்களில் மட்டுமே ஆர்வமுண்டு) , அதுவும் நோன்பு நாட்களில் காலையில் இருந்து சாப்பிடாமல் தண்ணீர் கூட குடிக்காமல் உச்சி வெயிலில் நின்று விளையாடிக் கொண்டிருப்பவனைப் பார்க்கும் போது "குளூக்கோன் டி " விளம்பரத்தில் வரும் பையனைப் போல் அவ்வளவு புத்துணர்ச்சியுடன் இருப்பான், இது எப்படி சாத்தியம் என்று இன்று வரை எனக்கு புரியவேயில்லை. அவனின் கட்டாயத்தால் அவனுடன் ஒரே ஒரு நாள் ஃபுட்பால் விளையாடச்சென்ற எனக்கு ஏற்பட்ட விளைவுகள் அடுத்த பதிவில்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment